நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு.
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போது சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவு சுமார் 45 சதவீதமாக உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நீர்த்தேக்கங்களில் தற்போதுள்ள நீரின் அளவு சுமார் 33 சதவீதமாக இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்) பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி.ஹேரத் தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தற்போது சுமார் 20 சதவீத அளவில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், 'யால' பயிர்ச்செய்கை பருவம் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எஞ்சியிருக்கும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தற்போதுள்ள நீர் இருப்பு போதுமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த நீர்த்தேக்கங்களை குடிநீருக்காகச் சார்ந்திருக்கும் பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் ஹேரத் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில், வரவிருக்கும் 'மஹா' பருவத்திற்கான விவசாய நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. பருவத்திற்கு முந்தைய மற்றும் பருவக்காலக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அம்பாறை மாவட்டத்தில் 'மஹா' பருவத்திற்கான பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் நாளை (15) ஆரம்பமாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
'மஹா' பருவத்தில் ஏனைய நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கான திகதிகள், நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் மட்டம் மற்றும் மழைவீழ்ச்சி முன்னறிவிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு வருவதாகவும் ஹேரத் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.