பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அச்சம்.

13.03.2026 08:15:25

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நடைபெற்று வருவதால், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, விலை உயர்வு போன்றவற்றால் தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டும், உணவு வகைகள் குறைக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என பரவி வரும் வதந்தியால் இன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பொதுமக்கள் அதிகாலையிலேயே குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் காரணமாக கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் கடும் பிரச்சனை நிலவி வருகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஹோட்டல்கள் மூடப்பட்டும், உணவு வகைகள் குறைக்கப்பட்டும் வருகின்றன.

கமர்ஷியல் சிலிண்டர்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் வீட்டுத் தேவைக்கான சிலிண்டர்களை புக் செய்யத் தொடங்கியதால் பல்வேறு பகுதிகளில் சேவை முடங்கியது. இதற்கிடையே பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரவி வரும் வதந்தியால் பொதுமக்கள் பலரும் பெட்ரோல் பங்க்குகளில் குவியத் தொடங்கியுள்ளனர். சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெட்ரோல் பங்குக்களில் நேற்று நள்ளிரவு வரை கூட்டம் அலைமோதியது.

இன்று அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் ஏராளமான இருசக்கர வாகனம் மற்றும் கார் ஓட்டிகள் அதிக எண்ணிக்கையில் காத்திருந்து பெட்ரோல் நிரப்பிச் சென்றன. அன்றாட வேலைகள், அலுவலகங்கள், கல்லூரிகள் செல்ல, அவசர தேவைகளுக்கு என வாகனங்கள் மிகவும் அவசியமாக இருப்பதால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் முன்கூட்டியே பெட்ரோல், டீசல் வாங்கி வைத்துக் கொள்வதாக பொதுமக்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களில் பெட்ரோல் டேங்க் முழுமையாக நிரப்பியதோடு மட்டுமல்லாமல் கேன்கள், டின்கள், குடங்களில் எல்லாம் பொதுமக்கள் பெட்ரோல், டீசல் வாங்கிச் சென்று வருகின்றனர். அதேநேரத்தில், போதுமான அளவு எண்ணெய் கையிருப்பு இருப்பதால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள், மத்திய, மாநில அரசுகளும் தொடர்ந்து கூறி வருகின்றனர். திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என வதந்தி பரவியதால், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப குவிந்த வாகன ஓட்டிகளால் பரபரப்பு நிலவியது.

இதேபோல, சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகள், புதுக்கோட்டை, தஞ்சாவூரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் நிரப்பிச் சென்று வருகின்றனர். பெட்ரோல், டீசலை கேன்களில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைக்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வாங்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தக் கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் போடுவதற்காக வந்து பெட்ரோல், டீசல் கிடைக்காத காரணத்தால் இன்று அதிகாலையிலேயே வந்திருக்கிறோம் என்றும், எரிபொருள் இல்லையென்றால் வேலை உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள மிகவும் சிரமப்படும் சூழல் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக பெட்ரோல், டீசல் நிரப்புவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.