மொழியை வளர்க்க சன சமூக நிலையங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

28.04.2026 14:00:00

தமிழ் தேசிய இனத்தினுடைய மிகப்பெரிய அடையாளம் மொழி, மொழியை வளர்க்க சன சமூக நிலையங்கள் ஊக்கப் படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

 

கிளிநொச்சி சோரன்பாற்று சரஸ்வதி சன சமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெருவித்துள்ளார். 

 

இவர் மேலும் தெரிவிக்கையில்,

 

ஒரு சன சமூக நிலையம் உருவாகினால்  ஒரு சமூகத்தில் நல்ல மாற்றங்கள்,  முன்னேற்றங்கள் ஏற்படும் என்பது கடந்த கால அனுபவங்கள்.  கடந்த காலங்களில் அறிவை வளர்ப்பதற்கு சன சமூக நிலையங்கள் அதிகமான புத்தகங்களை தந்தன. 

ஒரு கிராமத்தினுடைய வளர்ச்சியில் பிள்ளைகளை வாசிக்கதூண்ட வேண்டும்.  அப்போதுதான்  சமூகத்தை முன்னேற்ற முடியும்.  உலகத்தில் சன  சமூக நிலையங்கள் மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடு நோர்வேயாகும்.   சுவீடனிலிருந்து நோர்வே விடுதலை பெற்றது. அது ஒரு நீண்ட கடல் பிரதேசம். 

யுத்தம் செய்யாமல்,  சத்தம் செய்யாமல் ஸ்வீடனில் இருந்து நோர்வே விடுதலை பெற்ற ஒரு நாடாகும். 

நீண்ட கடல் பரப்பைக் கொண்ட ஒரு நாடு நோர்வையாகும் 

ஒவ்வொரு கிராமங்கள் ரீதியாகவும்,  ஒவ்வொரு சன சமூக நிலையங்களை நோர்வே  திறந்தது. ஏனெனில் சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்த போது அவர்களுக்கு ஸ்வீடிஸ்  மொழி தான் தெரியும்.  

அப்போது அவர்களுக்கு தாய் மொழி தெரியாது. நோர்வே சுவீடனிடமிருந்து விடுதலை பெற்றவுடன் முதலாவதாக செய்த வேலை சன சமூக நிலையங்களை நிறுவி தங்களுடைய மொழியை ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் கற்பித்தார்கள். 

தன்னுடைய தாய் மொழி இனத்தினுடைய அடையாளம். நோர்வேக்கான அடையாளங்களை கொண்டு வருவதற்கு சன  சமூக நிலையங்கள்  பாரிய பங்களிப்பை செய்தன.

இதனால்தான் எங்களுடைய பிரதேசங்களிலும் இந்த சன சமூக நிலையங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. 

 

இங்கே யுத்தம் இடம்பெற்ற போது  விடுதலைப் புலிகள் சந்திக்குச் சந்தி அறிவித்தல் பலகை அதாவது உறுமல் என்கின்ற அறிவித்தல் பலகையை நிறுவியிருந்தார்கள்.

 

அந்த பலகையில் நடைபெறுகின்றது புதினங்களை  காலை மற்றும் மாலையில் எழுதியிருந்ததை  நாங்கள் வாசித்திருக்கின்றோம்நாவற்குளி  camp  அடித்த விடயம் நான் அதில் தான் படித்தேன். 

அந்தக் காலங்களில் இந்த விடயங்களை சனசமுக நிலையங்கள் மற்றும் உறுமல்களுக்கூடாகத்தான்  நாங்கள் பார்த்தோம்.

 

இன்று உலகத்திலே தொலைபேசியினுடைய பாவனை ஒரு காலம் மாற்றமாக இருக்கின்ற போதிலும் அதற்குள்ளும் சன சமூக நிலையம் ஒன்றை அமைப்பது என்ற தீர்மானம் மிகவும் கொடையான ஒரு விடயமாகும்.  

 

பிள்ளைகளை வாசிக்க பழக்குவது மிகவும் கட்டாயமாகும். ஏனெனில் பிள்ளைகள் சமூக ஊடகங்களில் பல விடயங்களை அறிகிறார்கள் தெரிந்து கொள்கிறார்கள். 

 

ஆனால் எழுதச் சொன்னால் அவர்கள் எழுதுகிறார்கள் இல்லை. தற்போது கடிதம் கூட எழுதத் தெரியாத இளைஞர் சமூகம் இருக்கின்றது.  அந்த அளவுக்கு நாங்கள்  வாசிப்பதில்லை எழுத்துக்களை  திருத்தி படிப்பதில்லை.  ஆகவே இந்த சரஸ்வதி சன சமுக நிலையம் பிள்ளைகளை நிறைய வாசிக்க தூண்ட வேண்டும். தூண்டினால் தான் பிள்ளைகளிடம் தன்னுடைய தாய் மொழி பற்றிய தெளிவை உருவாக்கலாம். 

 

மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். முகம் அழிந்து போனால் நாங்கள் எங்களை தமிழன் என்று சொல்லிவிட முடியாது.  தமிழ் தேசிய இனத்தினுடைய மிகப்பெரிய அடையாளம் மொழி.  ஆகவே மொழியை நாங்கள் படிக்க வேண்டும் என்றால் சன சமூக நிலையங்கள் எங்களுக்கு முக்கியமானவை. ஆகவே இந்த தூர நோக்கோடு தூர எண்ணத்தோடு இந்த சன சமூக நிலையத்தை அமைப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.