
உக்ரைனுக்கு 500 மில்லியன் டொலர் வழங்கிய 3 ஐரோப்பிய நாடுகள்!
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகள் உட்பட அமெரிக்க ஆயுதங்களை வழங்க நேட்டோ தலைமையிலான முயற்சிக்கு ஸ்வீடன், நோர்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் சுமார் 500 மில்லியன் டொலர் தொகையை அளிக்க உள்ளது. உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் பணம் செலுத்தினால், தங்களின் நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு விநியோகிக்க தயாராக இருப்பதாக கடந்த மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார். |
இந்த நிலையிலேயே ஸ்வீடன், நோர்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் 500 மில்லியன் டொலர் தொகையை ஒதுக்கியுள்ளது. இதனிடையே, நேட்டோ தலைமையிலான முயற்சி ஐரோப்பா முழுவதும் நீண்டகால பாதுகாப்பிற்கான ஒரு புதிய அடித்தளம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனால் ரஷ்யா ஒருபோதும் ஐரோப்பாவை போர்க் கண்டமாக மாற்றாது, மேலும் நமது கூட்டு முயற்சிகள் மூலம்தான் அமைதி நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ட்ரோயல்ஸ் லுண்ட் பவுல்சன் தெரிவிக்கையில், பணம் உடனடியாக விடுவிக்கப்படும் என்றும், கூடுதல் நிதியுதவியைப் பின்னர் பரிசீலிக்க டென்மார்க் தயாராக உள்ளது என்றும் கூறினார். முதற்கட்டமாக 90 மில்லியன் டொலர் தொகையை டென்மார்க் அளித்துள்ளது. நோர்வே 146 மில்லியன் டொலரும் ஸ்வீடன் 275 மில்லியன் டொலரும் பங்களிக்க உள்ளனர். இந்த நிதியுதவியை வழங்குவதற்கான விரைவான நடவடிக்கைக்கு மூன்று நாடுகளுக்கும் கூட்டணி நன்றி தெரிவிப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே கூறினார். |