இன்சமாமுக்கு இதய சிகிச்சை
29.09.2021 16:07:08
பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் (51). தேர்வுக்குழு தலைவராகவும், சில நாட்கள் முன்பு வரை அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்தார். நேற்று முன்தினம் நெஞ்சு வலிப்பதாகவும், மூச்சு விட சிரமப்படுவதாகவும் கூறியதை அடுத்து லாகூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு உடனடியாக சோதனை செய்ததில், ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. அதனையடுத்து அவருக்கு அடைப்புகளை நீக்க அவசர ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ செய்யப்பட்டது. இப்போது நலமுடன் இருப்பதாகவும், சில நாட்களில் இன்சாம் வீடு திரும்புவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இன்சாம் 1991- 2007 வரை 120 டெஸ்ட், 378 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி உள்ளார். சர்வதேச ஆட்டங்களில் 20 ஆயிரம் ரன்னுக்கு மேல் குவித்த ஒரே பாகிஸ்தான் வீரர் இவர்தான்.