காலி முகத்திடலில் ஏராளமானோர் கைது!
புதிய இணைப்பு
காலி முகத்திடலில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி முகத்திடல் மைதானத்திற்குள் உள்நுழைந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பலர் ஓடிச் செல்ல முற்பட்டபோதும் காவல்துறையினர் அவர்களை துரத்தி துரத்தி கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அங்கு கடும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடத்திலும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு - காலி முகத்திடலில் தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு குழுமியிருந்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் காலி முகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் அரசுக்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் பொருட்டும், அநீதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பெருமளவான காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்துவதற்கு தயார்
எதிர்ப்பு கோசங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்களை விலகிச் செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தி வந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரும்பிச் செல்லாது எதிர்ப்பு கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பத்து நிமிடங்கள் நேரம் வழங்கப்பட்டு அவர்களை விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாதவிடத்து கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்துவதற்கு காவல்துறையினர் உள்ளிட்டோர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது