புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் இனவாதத்தைத் தடுப்பது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தின் பிரதான நோக்கம், இனவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுமாகும் என விவசாய, காணி, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
விக்டோரியா திட்டத்தின் கீழ் மகாவலி காணிப் பயனாளிகளுக்குக் காணி உரித்துறுதிகளை வழங்கும் நிகழ்வு இன்று (14) கண்டி, திகன பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
புதிய சட்டமூலம் தற்போது பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெறும் வகையில் பகிரங்கக் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் கூறியுள்ளார்.
வெவ்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டவர்கள் தங்களது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப இந்தச் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
பயங்கரவாதத்திற்கு இடமளிக்காமல் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானது எனக் குறிப்பிட்ட அமைச்சர், இலங்கையில் இனவாதம் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்றும், சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது அது மீண்டும் தலைதூக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
இனவாதம் மீண்டும் உருவெடுப்பதற்கு இடமளிக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், அதனைக் கட்டுப்படுத்தவும் தடுத்து நிறுத்தவும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்காமலும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு அனைவருக்கும் முழுமையான உரிமை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திற்கும் அரசாங்கம் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்திலும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதில்லை.
மேலும், அரசாங்கத்திற்கு எதிராக மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதற்கும் ஜனாதிபதியை விமர்சிப்பதற்கும் மக்களுக்கு உரிமை உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்பதிலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.