
12 இலங்கையர்களை நாடு கடத்தியது இஸ்ரேல்!
இஸ்ரேலில் இருந்து அண்மையில் சுமார் 12 இலங்கையர்கள் மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பாவனைப் பிரச்சினைகள் காரணமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். |
மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பாவனைப் பிரச்சினைகள் உள்ளவர்களை வெளிநாட்டு வேலைக்காக அனுப்புவதைத் தவிர்க்குமாறு தொடர்புடைய குடும்பங்களை இலங்கைத் தூதரகம் வலியுறுத்துவதாகவும் தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார். இஸ்ரேலில் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டிருந்த மற்றும் பொருத்தமற்ற நடத்தையை வெளிப்படுத்திய மேலும் இரு இலங்கையர்கள், கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலிலிருந்து கொழும்பிற்குத் நாடு கடத்தப்பட்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தூதுவர் நிமல் பண்டார, அந்த இரண்டு இலங்கையர்களும் டுபாய் வழியாக நாட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரிலேயே நாடு கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவர் போதைப்பொருள் பாவனை காரணமாக வேலைக்குச் செல்லாமல் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்ததாகவும், இரண்டாவது நபர் மன அழுத்தத்தால் தனது பணியிடத்திலிருந்து தப்பி ஓடி, வேலை இல்லாமல் அலைந்து திரிந்ததாகவும் அவர் மேலும் கூறினார். இவ்விருவரும் இஸ்ரேலில் உள்ள இலங்கை சமூகத்தின் உறுப்பினர்களால் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இருவரது கடவுச்சீட்டுகளும் தொலைந்து போனதால், தூதரகம் இலவசமாக இரண்டு தற்காலிக கடவுச்சீட்டுகளை வழங்கியதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். அவர்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்தபோது அவர்களின் நலனைத் தூதரகம் உறுதி செய்ததாகவும், அவர்கள் புறப்படுவதற்காக விமான நிலையம் வரை அவர்களுடன் சென்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். |