எரித்தும் அழிக்க முடியாத வடு 43 வருடங்கள் நிறைவு
ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளன.
1981 மே 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நள்ளிரவில்; வன்முறைகள் இடம்பெற்றிருந்தன.
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்னையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே31 மற்றும் ஜுன் 1 ஆம் திகதி இரவு; இடம்பெற்றது. 1981 மே 31 இரவு ஆரம்பமான இந்த வன்முறைகளின்போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன.
இந்நிகழ்வு 20ம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகும். இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்க, சிறில் மத்தியூ உள்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.
1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் தீகக்கிரையாகி அழிந்தன.
இன்றோடு ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.