உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அவசரம் காண்பிக்கவேண்டாம்
உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அவசரம் காண்பிக்கவேண்டாம் எனவும், அதற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட தரப்பினருடன் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் உண்மை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேச வல்லுனர்கள் அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பிலான 51/1 தீர்மானம் தொடர்பான ஆணை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குவரும் நிலையில், உள்நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுவிஸ்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகின்ற போதிலும், பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இச்செயன்முறை தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதுமாத்திரமன்றி சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், நெருக்கடி கண்காணிப்புக்குழு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தமது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தியிருந்தன.
இருப்பினும் உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துவரும் பின்னணியில், இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கும், ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கும் அவசரம் காண்பிக்கவேண்டாம் என உண்மை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேச வல்லுனர்கள் அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தவிருப்பதாக அறியமுடிகின்றது.
அதுமாத்திரமன்றி உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் இறுதி வரைபைத் தயார்செய்வதற்கு முன்னதாக நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.