ஈரானிய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

21.05.2024 15:00:00

ஈரான் ஜனாதிபதி  இப்ராஹிம் ரய்சியின் மறைவை தொடர்ந்து, அந்நாட்டின் புதிய  ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 28-ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி  உயிரிழந்த 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய ஜனாதிபதியை தேர்தெடுக்க வேண்டும் என்பது ஈரான் அரசியலமைப்பு சட்ட விதி. அதன்படி,  தெஹ்ரானில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலுக்கான திகதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 30ம் திகதி முதல் ஜூன் 3ம் திகதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், தேர்தலுக்கான பிரசாரம் ஜூன் 12ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடத்தப்படும் எனவும்,  இதையடுத்து ஜனாதிபதித் தேர்தல் ஜூன் 28ம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றுவிட்டு ஹெலிகொப்டரில் திரும்பும் போது ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சி விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.