பிரித்தானிய சுகாதாரத் துறையில் உச்சகட்ட பதற்றம்.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் கைவிடப்படாவிட்டால், மருத்துவர்களுக்காக முன்வைக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர்அறிவித்துள்ளார்.
இதில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள், கூடுதல் பயிற்சி இடங்கள் மற்றும் ஊதிய சீர்திருத்தங்கள் குறித்த திட்டங்கள் அடங்கும். இந்தச் சலுகைகளைத் திரும்பப் பெற்றால், அது மருத்துவத் துறையில் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் பயிற்சி மருத்துவர்கள் குழு, அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள 3.5வீத ஊதிய உயர்வு, தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஈடுகொடுக்க போதுமானதாக இல்லை என வாதிடுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட ஊதிய இழப்புகளை ஈடுகட்ட கணிசமான உயர்வு தேவை என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
இருப்பினும், பிரதமர் ஸ்டார்மர் இந்த வேலைநிறுத்தத்தை ‘அலட்சியமானது’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய 3.5வீத முன்மொழிவு பணவீக்கத்தை விட அதிகமானது என்றும், இது நடைமுறைக்கு வந்தால் மூன்று ஆண்டுகளில் மருத்துவர்களின் மொத்த ஊதிய உயர்வு 35வீதம் ஆக உயரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ‘
இதேவேளை, எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாத சூழலில், திட்டமிட்டபடி ஏப்ரல் 7 முதல் ஆறு நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இது ஏற்கனவே பணிச்சுமையால் திணறி வரும் NHS மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் ரத்து செய்யப்பட வழிவகுக்கும்.
அரசாங்கத்தின் இந்த 48 மணி நேரக் கெடு, மருத்துவ சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இக்காலக்கெடு முடிவடைவதற்குள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், பிரித்தானிய சுகாதாரத் துறை ஒரு பாரிய நெருக்கடியைச் சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.