இலங்கை – ஐ.நா. ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை!
2028-2032 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழியப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகத்தின் கீழ், இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட இந்நாட்டின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரு கட்டங்களாக நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், இந்நாட்டின் பொருளாதார மாற்றத்தை துரிதப்படுத்துவது, முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் முக்கிய தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளை தொடர்ந்து முன்னோக்கிகொண்டு செல்வது போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
மேலும், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு இணையாக, பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து நிலைபேறான, அனைவரையும் உள்ளடக்கிய, ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை நோக்கியும், தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் நீண்டகால கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைவதற்கான வேலைத்திட்டம் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
நிர்வாக மற்றும் கொள்முதல் செயல்முறைகளை முறைப்படுத்துதல், முதலீடுகளுக்கான அதிகாரத்துவத் தடைகளை நீக்குதல், அரச நிறுவனங்களை நவீனமயப்படுத்தல் மற்றும் அரச துறையின் செயல்திறன் மற்றும் சேவை வழங்குதலை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதன் அவசியத்தை இலங்கை பிரதிநிதிகள் குழு இங்கு வலியுறுத்தியது.
அரசாங்க தரவுக் கட்டமைப்புகள், நிறுவன திறன்கள் மற்றும் வருமான நிர்வாகத்தை வலுப்படுத்துவதும் இந்த கலந்துரையாடலில் முன்னுரிமைகளாக அடையாளம் காணப்பட்டன.
காலநிலை மீள்திறன், அனர்த்த அபாயத்தைக் குறைத்தல், விவசாய நவீனமயமாக்கல், உணவுப் பாதுகாப்பு, இலக்கு மையப்பட்ட சமூகப் பாதுகாப்பு, இளைஞர் வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதுமையடைந்து வரும் மக்களுக்கான தயார்நிலை ஆகியவை, ஒத்துழைப்புக்காக அடையாளம் காணப்பட்ட ஏனைய முன்னுரிமைத் துறைகளாகும்.
ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனங்களின், சிறிய அளவிலான தனித்தனித் திட்டங்களுக்குப் பதிலாக, உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், இருக்கும் அரச நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலமும், 'ஒரு பிரிவாக செயல்படுதல்' (Delivering as One) என்ற ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு வளங்களைத் திரட்டும் முறைகளாக, கலப்பு மற்றும் சலுகை நிதி வசதிகள், காலநிலை நிதிகள் மற்றும் அரச-தனியார் கூட்டாண்மை உள்ளிட்ட நவீன நிதியளிப்பு முறைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
2028-2032 புதிய ஒத்துழைப்புச் சட்டகமானது இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் இணங்குவதை உறுதிசெய்து, தொழில்நுட்ப நிபுணத்துவம், நிறுவனத் திறன் உருவாக்கம் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயாராகவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவினர் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் Marc-André Franch தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவில், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் அலுவலகத்தைச் சேர்ந்த Azam Bakeer Markar, ஐக்கிய நாடுகள் சபை அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பின் (IOM) தூதுக்குழுத் தலைவர் Kristin Parco ஆகியோர் உள்ளடங்குவர்.