இராணுவத்தின் நடவடிக்கைகள் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது!
|
வடக்கில் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் ஒரு அங்குலத்தை கூட விடுவிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
|
|
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற விலங்குகள் திருத்தச் சட்டமூலம் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகால் சேவைகள் சபை திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சுகாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு புகையிலையை தடை செய்வதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை. இருப்பினும் வடக்கு மாகாணத்தில் புகையிலை உற்பத்தி பிரதான வருமான பயிர்ச்செய்கையாக காணப்படுகிறது. புகையிலை பயன்பாட்டை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதால் அந்த பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எவ்விதமான காலவகாசமும் வழங்காமல் இந்த பயிர்ச்செய்கையை தடை செய்வது முறையற்றது. சுகாதார காரணிகளை கருத்திற் கொண்டு பயிர்ச்செய்கையாளர்களுக்கு உரிய நிவாரணமோ அல்லது காலகாசமோ வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வவுனியா வடக்கு பகுதியில் உள்ள கறுப்புக்குத்தி குளம் கடந்த 17 ஆண்டுகளாக புனரமைக்கப்படவில்லை.இதனால் அந்த குளம் முழுமையாக சேதமடையும் அபாய நிலை தற்போது காணப்படுகிறது. ஆகவே புனரமைப்புக்கு தேவையான நிதியை ஒதுக்கி இந்த குளத்தை புனரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் அவசியம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் கிடையாது. என்பதை ஏ ற்றுக்கொள்கிறேன். கால்நடை மற்றும் பால் உற்பத்தி தொடர்பில் சபையில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு, மயிலத்தமடு மேய்ச்சல் தரை என்பதொன்று கிடையாது என்று அமைச்சர் பதிலளித்துள்ளார். அரசாங்கம் இவ்வாறான பதிலை வழங்கியுள்ளமை ஆச்சரியத்துக்குரியது. கடந்த அரசாங்கங்கள் இவ்வாறு பதிலளிப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக அழுத்தமாக குறிப்பிட்டுக் கொண்டு இவ்வாறு பதிலளிப்பது ஆச்சிரியத்துக்குரியது. போரால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் விவசாய காணிகளை தொடர்ச்சியாக ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு காணி உரிமையாளர்களுக்கு அதன் பயனை வழங்காமல் தடுப்பது முறையற்றது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. முல்லைத்தீவு, கேப்பாபிளவு,வசாவிலான்,தையிட்டி, ஆகிய பகுதிகளில் தனியார் காணிகளை படையினர் ஆக்கிரமித்து இன்றும் ஆதிக்கம் கொண்டுள்ளார்கள். தமிழ் மக்களின் குடியிறுப்பு மற்றும் விவசாய காணிகள் 1000 ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இன்று வரை காணி உரிமையாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. போர் காலத்தில் இனவாத நோக்கத்துடன் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கொள்கைக்கு முரணாகவே செயற்படுகிறது. 2026.07.26 ஆம் திகதியன்று காணி அமைச்சு ஒரு விசேட அறிவித்தல் பத்திரத்தை வெளியிட்டுள்ளது. கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது வடக்கு மாகாணத்தில் 6000 ஏக்கர் காணிகள் தொடர்பில் ஒரு அறிவித்தல் பத்திரம் வெளியிடப்பட்டது. மூன்று மாத காலத்துக்குள் காணி உரித்து தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்காவிடின் அந்த காணிகள் அரசுமடையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடுமையான எதிர்ப்புக்களை தொடர்ந்து அந்த அறிவிப்பை அரசாங்கம் மீளப்பெற்றது. அதன் தொடர்ச்சியாகவே கடந்த மாதம் 26 ஆம் திகதி புதிய ஒரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் அதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்சிக் வந்தவுடன் படையினர் வசமுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படும் என்று அரசாங்கம் வாக்குறுதியளித்தது, ஆனால் தற்போது அந்த காணிகள் விடுவிக்கப்படாமல், உறுதிப்படுத்தாத நிலையில் உள்ள காணிகளை சுவீகரிக்க கவனம் செலுத்தப்பட்டு, காணி அமைச்சு ஊடாக அறிவித்தல்கள் வெளியிடப்படுகின்றன.இது சந்தேகத்துக்குரியது. தையிட்டி, மலியிட்டி, பலாலி, வசாவிளான், கேப்பாப்பிளவு ஆகிய பிரதேச மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.புதிதாக காணிகளை சுவீகரிக்காமல், ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பகுதியில் கிராஞ்சி,வேறவில், வரைபாடு ஆகிய பகுதிகளில் 34 காற்றாலை களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலக பிரிவு ஊடாக அப்பகுதி மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கிராஞ்சி பகுதியில் அமைக்கவுள்ள 24 காற்றாலைகளில் 13 காற்றாலைகள் மக்களின் குடியிறுப்புக்களிலும், விவசாய நிலங்களிலும் அமைக்கப்படவுள்ளன.இதனை தயவு செய்து நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.அபிவிருத்தி என்ற பெயரில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தையிட்டி பகுதியில் தனியார் காணிக்குள் சட்டவிரோதமான முறையில் விகாரை ஒன்று கட்டப்பட்டது. இந்த பகுதியை அளவீடு செய்வதாக குறிப்பிடப்பட்டது. அளவீடுகளைத் தொடர்ந்து காணிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில் எழுத்துமூலமாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் ஊடாக குறிப்பிட்டிருந்தோம்.வடக்கு பகுதியில் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள 3000 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலம் காணியை கூட விடுவிக்க போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளமை இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். |