சம்பள பிரச்சினை - கமல் படப்பிடிப்பு நிறுத்தம்

16.10.2021 14:20:57

 

கமல், விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவாகி வருகிறது 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அனிரூத் இசையமைக்கும் இப்படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது விக்ரம் படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்குவதாக இருந்தது. ஆனால் கடைசிநேரத்தில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதற்குக் காரணம், ஏற்கெனவே படப்பிடிப்பில் கலந்து கொண்டு பணியாற்றிய சண்டைக் கலைஞர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லையாம். பலமுறை கேட்டும் படக்குழுவினரிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை என்பதால், ஊதியத்தைக் கொடுத்தால் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொள்வோம் என்று அவர்கள் சொல்லிவிட்டார்களாம். எனவே தான் படப்பிடிப்பு ரத்து ஆகியுள்ளது.