மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும்!
|
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் மனித உரிமைகளை மீறும் வகையிலும், தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர்கள், இச்சட்டமூலத்தை தற்போதைய வடிவத்தில் முன்னெடுத்துச் செல்லவேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். |
|
கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இச்சட்டமூலம் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் சபையின் ஐந்து சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழு தயாரித்த 31 பக்க அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : முன்மொழியப்பட்டுள்ள இச்சட்டமூலமானது, இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் கொடூரமான மற்றும் பரந்த அதிகாரங்களைப் பொலிஸாருக்கு வழங்க முற்படுவதாக உள்ளது. குறிப்பாக, பொலிஸுக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் சந்தேக நபர்களை ஒரு வருடம் வரை பொலிஸ் காவலில் வைக்க இச்சட்டமூலம் அனுமதிக்கிறது. மேலும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவி நிலைக்கு மேற்பட்ட அதிகாரியிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியங்களாக ஏற்கவும், அச்சுறுத்தல் மூலம் அந்த வாக்குமூலம் பெறப்பட்டது என்பதை சந்தேக நபரே நிரூபிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இது சித்திரவதைகள் மற்றும் கட்டாய வாக்குமூலங்களைப் பெறுவதற்கான அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும். அத்துடன், இச்சட்டமூலத்தின் கீழ்வரும் நீதிமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் முன்அனுமதியின்றி செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கும் சரத்துகள் ஊடகச் சுதந்திரத்தைப் கடுமையாகப் பாதிக்கும். பொலிஸார் நீதிமன்ற அனுமதியின்றி தொலைத்தொடர்புப் பதிவுகளை அணுகவும், தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்கவும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கான வரைவிலக்கணம் மிகவும் பரந்ததாக உள்ளதால், எதிர்காலத்தில் தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோரும் இச்சட்டத்தின் கீழ் இலக்குவைக்கப்படலாம். ஏற்கனவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த சட்டமூலத்தைத் திரும்பப் பெறுமாறு பரிந்துரைத்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். சிவில் சமூக அமைப்புகள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுடன் கலந்தாலோசித்து இச்சட்டமூலத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம். தடுப்புக்காவல் அதிகாரங்கள் உட்பட 15 முக்கிய விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது |