தமிழ் மாணவர்களுக்கு அநீதி!

08.08.2026 07:59:05

க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல் பாட வினாத்தாளில் பாரிய மொழிபெயர்ப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், இது தமிழ் மொழியில்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.

   

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) கேள்வி நேரத்தின் போது பேசும்போதே இவ்விடயத்தை வெளிப்படுத்தினார்.

க.பொ.த உயர்தர உயிரியல் பரீட்சை வினாத்தாளில் தொடர்ச்சியாக, அதாவது கடந்த பல வருடங்களாக ஆங்கிலத்தில் தயாரிக்கப்படுகின்ற பரீட்சை வினாத்தாள் தமிழ் மொழிக்கு மாற்றப்படும் போது பாரிய மொழிபெயர்ப்பு தவறுகள் இடம்பெறுகின்றன. இதனால் மாணவர்கள் பெருமளவான புள்ளி இழப்புக்களை சந்திக்கின்றார்கள்.

என்னிடம் 2025ம் ஆண்டு உயிரியல் பரீட்சை வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இருக்கின்றது. அதில் பலவிடைத்தேர்வு வினா( MCQ) பகுதியில் பல வினாக்களில் மொழிபெயர்ப்பு தவறு உள்ளதை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன். உதாரணமாக ஒரு கலத்தின் உள்ளடக்கத்தை குறிக்கும் சொல்லிற்காக உள்ளடக்கத்தின் உள்ளடக்கத்தை குறிப்பது போன்ற தவறுகள் இங்கு காணப்படுவதால் மாணவர்கள் வினாவிற்குரிய பதிலை தெரிவுசெய்வதில் பாரிய இடர்பாடுகள் ஏற்படும்.

கேள்வியிலும் மொழிபெயர்ப்பு பிழை, கொடுக்கப்படும் பதிலிலும் பிழை என்றால் மாணவர்களின் எதிர்காலம் என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இப்போது சற்றுநேரம் முன்பு கெளரவ சாமர சம்பத் எம்பி என்னிடம் வந்து பேசினார். இந்தமுறை நடக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையில் பாலி மொழியும் சித்திரமும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் போடப்பட்டிருப்பதாக என்னிடம் சொன்னார். அப்படியெனில், ஒரு மாணவன் பாலி மொழியையும் சித்திரத்தையும் எவ்வாறு ஒரே நாளில் ஒரே நேரத்தில் பரீட்சை எழுதுவதென்று ஒரு பிரச்சினை உள்ளது.

ஆகவே, கெளரவ கல்வி அமைச்சர் அவர்களே, நான் ஏற்கனவே உங்களுடன் இது சம்மந்தமாக பேசியிருக்கின்றேன். நான் பேசியபின் ஒரு தடவை பரீட்சை நடந்திருக்கிறது. அடுத்த பரீட்சையும் வரப்போகிறது. இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இனியாவது இந்த மொழிபெயர்ப்பு தவறு நடக்காமல் தயவுசெய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

க.பொ.த உயர்தர பரீட்சை ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பரீட்சையாகும். இந்த தவறினால் பல மாணவர்களின் எதிர்காலம் நாசமடைகின்றது. தயவுசெய்து இவ்விடயத்தை கவனியுங்கள் என குறிப்பிட்டார்.