சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு!

26.09.2024 08:41:21

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

   

பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே,

பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம்.

எங்கள் வேலைத்திட்டத்தில் உடன்படாத தரப்பினர் கூட நாங்கள் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தால் மாத்திரமே நீங்கள் அளித்த இந்த வெற்றி மேலும் பலமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கி விட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்கு பெரும் உறுதியுடன் இருந்த பிரஜைகள் உட்பட அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த வெற்றிக்காக எமக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமான தியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக்கூட தியாகம் செய்த பல தலைமுறைகளின் விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். இந்த வெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்கை கூட்டுசெயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது.

நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நாம் நம்புகிறோம்.

அதற்காக நீண்டகால மத்திய கால திட்டங்களைத் தயாரிப்பதற்கு முன்னர், பின்பற்ற வேண்டிய துரித பொருளாதார செயற்பாடுகளின் ஊடாக குறுங்கால ஸ்தீரநிலையை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம்.

நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும் தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்தீர நிலையையும் நம்பிக்கையும் கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது.

அதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாக பேச்சுவார்த்தை ஆரம்பித்து நீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, சம்பந்தப்பட்ட கடன் தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அது தொடர்பான பணிகளை விரைவில் நிறைவு செய்து, உரிய கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

அதற்கு இந்த நாட்டு மக்களைப் போலவே சர்வதேச சமூகத்தினதும் ஆதரவையும் பெற முடியும் என நம்புகிறோம். அந்த ஒத்துழைப்பின் மூலம் இந்த கூட்டு முயற்சியில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறோம்.

எமக்கு அதிகாரத்தை கையளிக்கையில் 'மாற்றம்' ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாக பதிந்திருந்தது. மாற்றம் என எமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்துவிதமான மோசமான பண்புகளை மாற்றுவதையாகும்.

தற்போது அது நிரூபனமாகியுள்ளது. இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்துவிதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்குப் பின்னரான எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம் வெற்றியீட்டிய ஜனாதிபதித் தேர்தலாக வரலாற்றில் இணைக்க முடிந்துள்ளது.

இது நமது நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. இந்த நிலைமையை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவது எமது நோக்கமாகும். அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் அதற்காக வியூகம் அமைப்பதற்கும் எவருக்கும் உரிமையுள்ளது.

அரசியல் செய்யும் நேரத்தில் அரசியல் செய்வதற்கும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் இந்த தருணத்தில் வலியுறுத்துகிறேன். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குகிறோம்.

சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் "நாம் இலங்கைப் பிரஜைகள்" என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது.

தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.

இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக அவற்றை செயல்படுத்த அவசியமான செயற்திறன்மிக்க மற்றும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவு செய்துள்ளோம்.

பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் , எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம். சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கவும், ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அனைத்து பிரஜைகளினதும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம். எமது நாட்டை கட்டியெழுப்புகையில் அரச சேவைக்கு பாரிய பங்கு இருக்கிறது என்பதை நம்புகிறோம். பொது மக்களை கண்ணியமாக நடத்தும் அரசாங்கத்தின் இலக்குகளை நோக்கிச் செல்லும் அரச சேவையை உருவாக்குவோம்.

செயற்திறன் மிக்க, நேர்மையான மற்றும் ஜனரஞ்சகமான அரச சேவையை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. அதற்கான நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள அதிக வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் நிலை ஏற்பட இடமளிக்க மாட்டோம். தமது பிள்ளைக்கு நல்ல பாடசாலை மற்றும் சிறந்த கல்வியை வழங்க அந்த ஒவ்வொரு பெற்றோருக்கும் உரிமை உண்டு.

அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்கவும், அடுத்த தலைமுறையை பாதுகாக்கவும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அறிவு,திறன்,மனப்பாங்கு என்பவற்றை மேம்படுத்தி இளைஞர் சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படக் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம். எந்த நாட்டிற்கு நாம் சென்றாலும், விமான நிலையத்தின் தன்மையை வைத்து அந்த நாடு குறித்து ஒரு கண்ணோட்டைத்தை உருவாக்க முடியும்.

அதன் ஒழுங்கு, மக்களின் நடத்தை,செயல்பாடு, போன்றவற்றின் மூலமும் மறைமுகமாக அந்த நாட்டின் இயல்பு எடுத்துக் காட்டப்படுகின்றது. அதையும் தாண்டி சுற்றுச்சூழலின் தூய்மை, வீதிகளில் வாகனங்கள் செல்லும் விதம், முதியோர்களை நடத்தும் விதம், விருந்தோம்பல் செய்யும் முறை, விலங்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதையும் உறுதிப்படுத்த முடியும். நம் நாட்டின் பிம்பத்தை அதே வகையில் தெளிவாக தெரியும் வகையில் கட்டியெழுப்ப நாம் திட்டங்களை தயாரித்து முடித்துள்ளோம்.

அந்த உருவாக்கத்திற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நாட்டின் கடவுச்சீட்டை உலகமே மதிக்கும் நிலைக்கு, நாம் நாட்டை கட்டியெழுப்புவது அவசியம். இந்த நாட்டின் பிரஜைகளுக்கு 'நான் இலங்கையர்' என்று பெருமையுடன் கூறக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம்.

இந்த நாட்டின் பிரஜையாக இருப்பது பெருமை என்று நம் நாட்டு மக்கள் உணரும் வகையில் இந்த நாட்டை உருவாக்குவது அவசியம். அதற்கு உங்களின் கூட்டுப் பங்களிப்பு தேவை. அனைத்து பிரஜைகளுக்கும் சமூக நீதியை நிறைவேற்றும் அரசொன்றை உருவாக்க நாம் பொறுப்புடன் பங்களிக்கிறோம்.

அறிவு, திறன்கள், கல்வி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் மூலம் எமது சிறுவர்கள் மற்றும் இளைஞர் சந்ததிக்கு நம்பகமான எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்புவோம். நமது நாட்டின் சனத்தொகையில் ஐம்பத்திரண்டு வீதத்தைத் தாண்டிய பெண்கள் சமூகம், இந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகச் செயல்பாட்டிற்கு பெரும் பங்களிப்பைச் செய்யும் குழுவாகும். பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாக அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாம் செல்வோம்.

சகல நிறுவனங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்துவதற்கு நாம் செயற்படுவோம். அதற்கான எமது அர்ப்பணிப்பின் முன்னுதாரணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஏற்கெனவே எமது பிரதமர் பதவிக்கு பெண் ஒருவரை நியமித்துள்ளோம். எமது சனத்தொகையில் பெருந்தொகையானோர் ஊனமுற்று விசேட சமூக பாதுகாப்பு கிடைக்க வேண்டியவர்களாகும். அவர்களுக்காக பலமான சமூக பாதுகாப்பு கட்டமைப்பொன்றை நாம் திட்டமிட்டுள்ளதோடு அதன் குறுங்கால நடவடிக்கையை விரைவாக ஆரம்பிப்போம்.

நாம் செல்லும் பயணத்தில் சமூக கட்டமைப்பின் எந்தவொரு பகுதியையும் கைவிடப்போவதில்லை என்பதற்கு நாம் பொறுப்பு கூறுகிறோம். ஒவ்வொருவரினதும் தனித்துவத்திற்கு மதிப்பளித்து அவற்றை நாட்டின் முன்னேற்றத்துக்காக சாதகமான முறையில் பயன்படுத்திக்கொள்ள எமது பங்களிப்பை வழங்குவோம்.

மக்கள் இறைமைக்கு மதிப்பளிக்கும் அதேநேரம், அவர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்போம். எம் மீதான சந்தேகம் காரணமாக நிச்சயமற்ற நபர்கள் இருப்பதை நாம் அறிவோம். எனது செயற்பாடுகளின் ஊடாக உங்களின் நம்பிக்கையை வெல்ல எதிர்பார்க்கிறேன். உங்களுடைய விமர்சனங்களை பொறுத்தமான தருணத்தில் ஏற்றுக்கொள்வேன்.

அதேபோல் நாங்கள் கட்டியெழுப்ப போகும் எதிர்காலத்தின் பங்குதாரர்களாக உங்களை வலுவூட்டுவோம். எமக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளை கலைய முடியுமானால்,நமக்கிடையிலான இலக்கு சமமானவை என நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

அதன் ஊடாக நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடியை ஏற்றுக் கொள்ளவும் அதன் ஊடாக முன்னோக்சிச் செல்வதற்குத் தேவையான மூலோபாயங்களை இணைந்து திட்டமிடவும் முடியும். இந்த நாட்டை கட்டியெழுப்வுதற்காக காத்திரமாகவும் நேர்மையாகவும் இணையும் அனைவருக்கும் எமது கதவுகள் திறந்துள்ளன.

மக்களின் ஆணைக்கு அமைவான பாராளுமன்றம் ஒன்று அவசியப்படுகிறது. இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன்.

அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டை கொண்டு செல்வதற்காக எமது பாராளுமன்ற பிரநிதித்துவத்திற்கு அமைவாக அமைச்சரவை ஒன்றை நியமித்தேன். அன்றாடம் சூரியன் உதிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மக்கள் காணும் கனவுகள் உள்ளன.

அது இன்று இருப்பதை விடவும் சிறந்த நாடாகும்! ஆனாலும், பல வருடங்களாக அது கனவாகவே போய்விட்டது என்பதையும் நானும் அறிவேன். சந்தர்ப்பவாதம், அதிகாரமோகம்,சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடியாமல் உள்ளது..! இருப்பினும், எமக்கு வரலாற்றில் நழுவவிட முடியாத சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம்.

      Bookmark and Share Seithy.com