தலைவர்கள் ஆதரவை வழங்க வேண்டும்!

05.04.2024 08:15:26

நாட்டில் இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

 

‘இலங்கையின் முன்னேற்றம் இன,மத, மொழி கடந்து ஒற்றுமையுடன் இணைந்து செல்லும்போதே மேலும் மேலும் நாட்டை முன்னேற்ற முடியும்.

எனவே, வடக்கு, கிழக்கில் வாழும் சகோதரர்களின் ஆணையில்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது. இதுவே காலம் காலமாக நடந்து வந்த நிலையில் இம்முறை அனைவரினதும் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.

ஆகையினால் அனைவரது முன்னேற்றத்துக்கும் எமக்கான ஆதரவை ஒருமித்து வழங்க வேண்டும். அவ்வாறு சகலரது ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் ஆட்சி அமைக்கப்படுகின்றபோது எந்தவித பாகுபாடுகளுமின்றி ஆட்சி அமையப்பெறும்.

இதனூடாக நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரிவினை அரசியலுக்கு முடிவு காட்டி இன, மத பேதமில்லாத ஒன்றிணைந்த அரசியலை மேற்கொள்ள எம்முடன் அனைவரும் வாருங்கள்.

எனவே, அனைவரும் சம உரிமைகளுடன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடியதான ஆட்சி அமையப் பெறுவதற்கு எமக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குங்கள் என இங்கு வைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கோருகின்றோம் என தெரிவித்தார்.