’சவால்களை ஏற்று ஜனாதிபதி செயல்பட்டார்’
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவால்களுக்குப் பயந்து ஓடாமல், அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டதால் இரண்டு வருடங்களின் பின்னர் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது என்று ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீட்டில் கடுவெல, மாபிம பிரதேசத்தில் நிறுவப்பட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய எரிவாயு நிரப்பு நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சாகல ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சகல புள்ளிவிவரங்களையும் அவதானித்தால், ஒரு நாடாக நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இரண்டு வருட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, முதன்மைக் கணக்கு இருப்பு உபரியாக மாறியுள்ளது. ரூபாயின் பெறுமதி வேகமாக வலுவடைந்து வருகிறது. நாடு நிலையானது மட்டுமல்ல, பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எதிர்காலத்தில் மேலும் சவால்கள் உள்ளன.
அந்நியச் செலாவணியை மேலும் அதிகரிக்க சுற்றுலாத் திட்டங்களை மேலும் மேம்படுத்த வேண்டும். நமது துறைமுகங்களை விநியோக மையமாக உருவாக்க வேண்டும். உற்பத்தித் தொழில்கள் மூலம் நாம் மேலும் முன்னேற முடியும். மின்சாரத்தைக் கூட ஏற்றுமதி செய்யலாம். விவசாயத்துறையை முன்னேற்றலாம். இதுபோன்ற பல வாய்ப்புகள் உள்ளன. இதற்கு தேவையான மனித வளமும் நம்மிடம் உள்ளது என்றார்