கருணைக் கொலைக்கு கூட இனி ஜேர்மனியில் தடுப்பூசி கட்டாயம் !

29.11.2021 17:13:44

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு கருணைக்கொலை கிளினிக்குகள் உதவாது என ஜேர்மன் கருணைக்கொலை சங்கம் அறிவித்துள்ளது.

ஜேர்மனியின் சட்டப்பூர்வமான கருணைக்கொலைக்கான சங்கமான Verein Sterbehilfe, தடுப்பூசி போடப்பட்ட அல்லது நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு மட்டுமே கருணைக்கொலை கிளினிக்குகள் இனி உதவும் என்று அறிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கருணைக்கொலை கிளினிக் ஊழியர்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக Verein Sterbehilfe சங்கம் தெரிவித்துள்ளது.

"கருணைக்கொலை மற்றும் இறக்க விரும்பும் எங்கள் உறுப்பினர்களின் தன்னார்வப் பொறுப்பின் ஆயத்த பரிசோதனைக்கு மனித நெருக்கம் (human closeness) தேவை" என்று சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இன்றைய நிலவரப்படி, எங்கள் சங்கத்தில் 2G விதி பொருந்தும், மூடிய அறைகளில் விரைவான சோதனைகள் போன்ற சூழ்நிலை தொடர்பான நடவடிக்கைகள் கூடுதலாக மேற்கொள்ளப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜேர்மனி தனது எல்லைகளுக்குள் கருணைக்கொலை நடைபெறுவதை அனுமதிக்க தொழில்முறையாக தற்கொலை செய்து கொள்வதற்கான தடையை பிப்ரவரி 2020-ல் ரத்து செய்தது.