
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!
எக்காரணிகளுக்காகவும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆனந்த ராஜகருண தெரிவித்தார். எரிபொருள் விநியோகம் தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார், |
அவர் மேலும் தெரிவித்ததாவது, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் வழமைக்கு மாறாக எரிபொருளை கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகத்தில் வரையறுக்கப்பட்ட நிலையில் தான் எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருக்கும், குறுகிய நேரத்தில் அளவுக்கு அதிகமாக எரிபொருள் நுகரும் போது இயல்பாகவே விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் இதனை எரிபொருள் தட்டுப்பாடு என்று குறிப்பிட முடியாது. நேற்று முன்தினம் 8,588 மெற்றிக்தொன் டீசல், 7,878 மெற்றிக்தொன் பெற்றோல், 200 மெற்றிக்தொன் சுபர் டீசல் 295 மெற்றிக்தொன் 95 ரக பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட போவதில்லை என்று குறிப்பிட்டு மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கிய விநியோக சங்கத்தினர் கொலன்னாவை மற்றும் திருகோணமலை பகுதிகளில் இருந்து விநியோகத்துக்காக எரிபொருளை கொள்வனவு செய்துள்ளனர். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். தற்போது எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது. போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. ஆகவே பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றார். |