தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கண்மூடித்தனமான தாக்குதல்

10.01.2021 10:22:12

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துவதோடு அவர்களை கைது செய்தும் வருகிறது. இதனை தடுக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டாலும் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில் ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அவர்களில் சிலர் தங்கள் படகுகளை கச்சத்தீவு அருகே நிறுத்தி மீன் பிடித்தனர். அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்ட குட்டி ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் இங்கு மீன்பிடிக்க கூடாது என்று எச்சரித்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் கட்டைகளை வீசி தாக்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை எடுத்துக்கொண்டு புறப்பட முற்பட்டனர். இருப்பினும் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து அந்த பகுதியில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை இரவு முழுவதும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர். மேலும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிருபை என்பவரது விசைப்படகும் சிறை பிடிக்கப்பட்டது.

அதில் இருந்த மீனவர்கள் கிருபை, வளன் கவுசிக், மிக்கேயாஸ், சினிங்ஸ்டன், சாம்ஸ்டில்லர், மிஜான், பிரைட்டன், கிஷோக், மாரி ஆகிய 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் துறைமுகம் கொண்டு சென்றனர்.

இதனால் ராமேசுவரம், தங்கச்சிமடம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இரவோடு இரவாக கரை திரும்பினர்.

இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், இந்திய எல்லையில்தான் மீன்பிடிக்கிறோம். ஆனால் இலங்கை கடற்படை எங்களை தொடர்ந்து தாக்கி வருகிறது.
 

ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகள் இலங்கை கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் கொரோனா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.