’பேச்சுவார்த்தை நடத்த மறுப்பது அறிவுப்பூர்வமானது அல்ல’.

19.05.2026 08:17:06

அமெரிக்காவுடன் பேச்சுக்களைத் தொடர வேண்டும் என்ற கருத்தை ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் வெளிப்படுத்தியுள்ளார்.

கண்ணியத்துடன் நடத்தப்படும் பேச்சு அவசியம் என்றும் ஈரான் தனது தேசிய உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஈரானிய மாணவர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், நிர்வாக அமைப்புகளின் மக்கள் தொடர்பு கூட்டத்தில் பேசிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான்,

பேச்சு நடத்த மறுப்பது அறிவுப்பூர்வமானதல்ல. நாங்கள் பேச்சில் ஈடுபடக்கூடாது என்று அவர்கள் கோஷமிடுகிறார்கள்.

நாங்கள் பேசவில்லை என்றால் என்ன செய்வது? இறுதிவரை போராடுவதா? நாங்கள் கண்ணியத்துடன் உரையாடலில் ஈடுபடுகிறோம். மக்களின் ஆதரவுடன் தேசத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் திறன் நமக்கு உள்ளது. நாம் தர்க்க ரீதியாகப் பேசி, தர்க்க ரீதியான பதில்களைப் பெற வேண்டும்.

நாட்டில் உள்ள ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் நாம் உடைக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். ஈரானின் எதிரிகள் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் மூன்று நாள்களில் ஈரானில் இஸ்லாமிய குடியரசு அமைப்பைக் கவிழ்க்க விரும்பினர், ஆனால் இன்று அவர்கள் பிளவுகளை விதைத்து முன்னேற சதித்திட்டம் தீட்டியுள்ளனர். நாங்கள் வெளிநாட்டினரை மதிக்கிறோம், நாங்கள் பேச்சு நடத்துகிறோம், மேலும் தேசத்தின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்று கூறினார்.