ஜி.வி படப் பாடலுக்கு இடைக்காலத் தடை.

08.07.2026 15:13:44

இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ஹெப்பி ராஜ்'

திரைப்படத்தில், தனது அனுமதியின்றி மாற்றி அமைக்கப்பட்ட "பொதுவாக எம்மனசு தங்கம்" பாடலைப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அறிமுக இயக்குனர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜீ.வி பிரகாஷ் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான திரைப்படம் ஹெப்பி ராஜ்'

இத்திரைப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'முரட்டுக்காளை' படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் புகழ்பெற்ற பாடலான "பொதுவாக எம்மனசு தங்கம்" பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில்,தனது அனுமதியின்றி, பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் பாடலை உருமாற்றிப் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்தப் பாடலைத் திரைப்படத்தில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், அதனை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். குமரேஷ் பாபு, ஹெப்பி ராஜ் திரைப்படத்தில் இப்பாடலைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாகப் பதிலளிக்குமாறு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் அறிக்கை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.