சவால்களிலிருந்து கட்சியை மீட்டெடுப்பதே எமது இலக்கு

07.04.2024 09:54:41

தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உள்ளிட்ட கட்சிக்கு எதிரான அனைத்து சவால்களில் இருந்தும் அதனை மீட்டெடுப்பதை இலக்காகக்கொண்டே பயணிக்கின்றோம் என்று இலங்கை  தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா சூளுரைத்துள்ளார்.

அத்துடன், முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அடுத்த வழக்குத் தவணைக்கு முன்னதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுடன் கலந்தாராய்வதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவிக்கையில்,

ஆரம்பத்திலிருந்து கட்சியின் ஒற்றுமையை நான் வலியுறுத்தி வருவதோடு கட்சியின் பதவி நிலைகளுக்காக போட்டியிடுவதால் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்து வருகின்றேன்.

இவ்வாறான நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தெரிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சில அங்கத்தவர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளை நாம் ஒற்றுமையாக முகங்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

தற்போதைய சூழலில் நீதிமன்ற வழக்குகளில் இருந்து கட்சியை விடுவிக்க வேண்டியுள்ளது. அத்துடன் தெரிவுகளில் குழப்ப நிலைமைகள் காணப்படுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டினால் அதுதொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.

மேலும் ஜனவரி மாதத்தில் நடைபெற்ற கட்சியின் தலைவர் தெரிவு  ஏனைய பதவி நிலைகளுக்கான தெரிவுகள் ஆகியவற்றில் கருத்து ரீதியான முரண்பாடுகளே காணப்பட்டதே யாப்புக்கு எதிரான எவ்விதமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. எனினும்,  உறுப்பினர்களில் சிலர் திருப்தி இன்மையால் நீதிமன்றத்தினை நாடியுள்ளனர். அதேநேரம், கட்சியில் இணைந்து மத்திய குழுவிலும் பொதுச்சபையிலும் அங்கத்துவத்தைப் பெற்றவர்களில் சிலருக்கு வாக்களிப்பதற்கான அறிவிப்பு முறையாக விடுக்கப்பட்டிருக்கவில்லை.

அதனால், தலைமைக்கான வேட்பாளர்களின் அங்கீகாரத்துடன் அவர்களை வாக்களிப்பில் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தொகுதிக்கிளைகளின் அங்கத்துவங்கள் பிரதேச செயலாளர் பிரிவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்ற திருத்தமும் 2011ஆம் ஆண்டி மேற்கொள்ளப்பட்டு தேர்தல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டும் உள்ளது. ஆகவே, கட்சியின் செயற்பாடுகள் யாப்பு அமைப்பு விதிகளுக்கு எதிரானவையாக அமையவில்லை என்பது தெளிவாகின்றது. எவ்வாறானினும்  நீதிமன்ற வழக்கு உட்பட கட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை முறியடித்து அனைத்து சவால்களில் இருந்தும் மீள்வதே எமது இலக்காகும்.

விசேடமாக, கட்சியை ஒற்றுமையாகவும் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் பயணிக்கச் செய்வதற்கான கடுமையான பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கட்சியின் மத்திய குழு அங்கத்தவர்களை அடுத்த வழக்குத் தவணைக்கு முன்னதாக சந்தித்து கலந்தராய்வில் ஈடுபடவுள்ளேன். மேலும் தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியை மக்களுக்காக வினைத்திறனுடன் தொடர்ந்தும் இணக்குவதற்கான அனைத்து தரப்பினரினதும் ஏகோபித்த ஆதரவையும் பெறுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.