
இந்தியா உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைக்கு பிறகு, நாட்டின் முதல் பெண் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்ற திருமதி சுசிலா கார்க்கிக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது X சமூக ஊடகப் பக்கத்தில், நேபாள மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட்ட பதிவில், "நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ள திருமதி சுசிலா கார்க்கிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நேபாளத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகளின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா தொடர்ந்து முழுமையாக ஆதரவளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான 73 வயது சுசிலா கார்க்கி, நேற்று முன் தினம் பதவியேற்றார். இதன் மூலம், நேபாள வரலாற்றில் பிரதமர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சுசிலா கார்க்கியின் இடைக்கால அரசாங்கத்திற்கு, நாட்டில் அமைதியை மீட்டெடுப்பது, வன்முறையை விசாரிப்பது, மற்றும் மார்ச் 5, 2026 அன்று நடைபெற உள்ள பொதுத் தேர்தல்களுக்குத் தயாராவது போன்ற முக்கியப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.