திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதா?

09.05.2026 14:05:16

திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான தகவலுக்கு CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் விளக்கமளித்துள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது.

  

அதேவேளையில், தமிழக அரசியலின் எதிர் எதிர் துருவங்களான திமுக - அதிமுக கூட்டணியமைத்து ஆட்சியை பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்மொழியப்படுவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

திமுக - அதிமுக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதா என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனிடம் கேள்வி எழுப்பிய போது, "இதற்கான பதிலை நீங்கள் அவர்களிடம் கேட்கவேண்டும்.

சில உரையாடல் எல்லாவற்றையும் சொல்லிட முடியாது, வெளியில் கருத்தாக வரும்போது அது குறித்து நாம் கருத்து சொல்லலாம். இது ஊடகங்களில் வந்தது தானே, அது எங்களுக்கு ஏற்புடையதாக அல்ல.

எங்களிடம் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டபோதும் நாங்கள் அதை மறுத்திருக்கிறோம், கூடாது பிழை என்று சொல்லியிருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.