நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை!
பசிபிக் கடலில் உள்ள வனுவாட்டு தீவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசிபிக் கடலில் உள்ள தீவுக் கூட்டங்கள் இடையே நியூசிலாந்திற்கு வடக்கே அமைந்துள்ள சிறிய தீவு நாடு வனுவாட்டு (Vanuatu). வனுவாட்டு தீவின் விலா துறைமுகத்திலிருந்து 31 கிமீ தள்ளி கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
நிலநடுக்கத்தின் தாக்கம் அருகே உள்ள ஃபிஜி தீவுகள், நியூசிலாந்து வரை உணரப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள நியூசிலாந்து உள்ளிட்ட தீவு நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை 7.17 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அதை தொடர்ந்து அதே பகுதியில் 7.23 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், பிறகு விலா துறைமுகத்திலிருந்து 72 கி,மீ தொலைவில் 4.7 ரிக்டர் அளவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.