சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார்.

16.10.2021 10:00:00

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தபோதும், அவர் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறி பின்வாங்கினார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசிய சசிகலா தான் விரைவில் கட்சியை கவனிப்பேன் என்றும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த முடிவு செய்த நிலையில், பாதுகாப்பு கேட்டு சசிகலா தரப்பில் சென்னை காவல் ஆணையரகம் மற்றும் தியாகராய நகர் காவல் ஆய்வாளரிடம் தனித்தனி மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதனையடுத்து இன்று காலை தியாகராயநகர் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற நிலையில், சசிகலா மெரினாவுக்கு வருவதை அறிந்த ஏராளமான அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர்.

அதிமுக கொடி பொறுத்தப்பட்ட காரில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த சசிகலா மலர்கள் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதேவேளை சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா நினைவிடத்துக்கு வருகை தந்தாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.