புதிய தலைமையில் அரசியல் கூட்டணி!

16.08.2025 09:00:00

இந்த அரசாங்கம் தன்னிச்சையான முறையில் செயற்படுகிறது. ஆகவே சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் வலுவாக அழுத்தத்தை அரசாங்கத்துக்கு பிரயோகிக்க வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டன. யார் தலைமையில் அரசியல் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து எவரும் வலியுறுத்தவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பின் பிரச்சினைகள் மற்றும் வடக்கு மற்றும் பெருந்தோட்ட தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு, முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பொதுவான தீர்வு கொள்கை ஒன்றை எதிர்வரும் நாட்களில் சமுகமயப்படுத்தவும், கலந்துரையாடலில் உறுதியான திட்டத்தை வகுத்ததன் பின்னர் எதிர்கட்சிகளின் சகல தரப்பினரும் எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதற்கு முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

பொருளாதார விவகாரங்கள்

 

முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் கொழும்பில் உள்ள இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தை அங்கீகரிக்கும் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மனோ கணேசன், ரிசாட் பதியுதீன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மயந்த திஸாநாயக்க, இந்தியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.

சமகால அரசியல் நிலவரம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சகல எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டுப்பொறுப்புடன் செயற்படுவதன் அவசியத்தை முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதன்போது எடுத்துரைத்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பின் பிரச்சினைகள் மற்றும் வடக்கு மற்றும் பெருந்தோட்ட தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு, முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பொதுவான தீர்வு கொள்கை ஒன்றை எதிர்வரும் நாட்களில் சமுகமயப்படுத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் ஊடாக உறுதியான திட்டத்தை வகுத்ததன் பின்னர் சகல தரப்பினரும் எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

அரசியல் கூட்டணி 

இந்த சந்திப்பு தொடர்பில் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிடுகையில்,

அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சந்திப்பு இடம்பெறவில்லை. இந்த அரசாங்கம் தன்னிச்சையான முறையில் செயற்படுகிறது. ஆகவே சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் வலுவாக அழுத்தத்தை அரசாங்கத்துக்கு பிரயோகிக்க வேண்டும்.

இச்சந்திப்பில் பலவிடயங்கள் பேசப்பட்டன. யார் தலைமையில் அரசியல் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து எவரும் வலியுறுத்தவில்லை.

ஏனெனில் தற்போதைய சூழலில் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட வேண்டும் என்பதை சகலதரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் யோசனைகள் எதிர்வரும் நாட்களில் மக்கள் மயப்படுத்தப்படும்“ என்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா குறிப்பிடுகையில், “அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சந்திப்பில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.

எதிர்க்கட்சிகள் பொதுக்கொள்கையின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். அதன் பிரதிபலனாகவே இந்த சந்திப்பு நடைபெற்றது“ என்றார்.

 

எதிர்க்கட்சி உறுதியாக செயற்படல்

 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கனேசன் குறிப்பிடுகையில், “நாட்டில் எதிர்க்கட்சி உறுதியாக செயற்பட வேண்டும். அப்போது தான் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அரசாங்கமும் சிறந்த முறையில் செயற்படும். யார் தலைவர் என்பதை தீர்மானிப்பதற்கு இந்த சந்திப்பு நடைபெறவில்லை. அதனை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்“ என்றார்.

இவ்வாறான நிலையில் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.