அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: 22ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!

30.01.2023 22:53:44

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாசை எதிர்கொண்டார்.

பெரும் எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 6-3, 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டார்.

இது நோவக் ஜோகோவிச் பத்தாவது அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டமாகும்.

அத்துடன் அவர் தனது 22ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ஸ்பெயினின் ரபேல் நடாலை சமன் செய்துள்ளார்.