அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல் இலங்கைக்கு வருகை!
இலங்கைக்கு வருகைத் தரும் வழியில், அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில், சுமார் 764 கொள்கலன்களில் பாரிய கழிவுத்தொகை காணப்படுவதாகவும் 56 கொள்கலன்களில் வெடிபொருட்கள் காணப்பட்டதாகவும் நாடாளுமன்றில் இன்று சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தக் கப்பலானது இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகக்கூடிய சந்தர்ப்பதம் காணப்படுவதாகவும் இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில் ” அமெரிக்காவின் கப்பலொன்று பாரிய கழிவுத்தொகையுடன் இலங்கை நோக்கி வருகைதருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு என்ற ரீதியில் சிந்தித்த இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.
இதற்கு முன்னரும் இவ்வாறான பிரச்சினைக்கு நாடு முகம் கொடுத்திருந்தது. சிங்கப்பூர் கப்பலான டாலியே இவ்வாறு இலங்கை நோக்கி பயணிப்பதாக தெரியவந்துள்ளது. அண்மையில் எமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அமெரிக்காவின் மேரிலேண்ட் வோல்டிமோர் பகுதியில் இந்தக் கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 4 ஆயிரத்து 644 கொள்கலன்கன் காணப்படுவதுடன் அவற்றில் 764 கொள்கலன்களில் கழிவுப்பொருட்கள் காணப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு தகவல் வழங்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
குறித்த கப்பல் எதிர்வரும் 15 நாட்களுக்குள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இந்த கப்பலில் 1.8 மில்லியன் எரிபொருள் காணப்படுகின்றது. எனவே இந்த கப்பல் ஏதேனும் அனர்த்தத்தை எதிர்கொள்ளும் பட்சத்தில் நாடு பாரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
இந்த கப்பல் அனர்த்தத்திற்குள்ளாகக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு பிரிவில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. எனவே அரசாங்கம் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். முன்னதாக இரண்டு சந்தரப்பங்களில் நாட்டின் கடற்பிராந்தியத்தில் இரண்டு சர்வதேச கப்பல்கள் தீவிபத்துக்குள்ளானதில் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.