கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி-தேசிய விருதுக்கு தேர்வான உடுமலை ஆசிரியர் பெருமிதம்
ஸ்கைப் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் அரசுப் பள்ளி மாணவர்களை உரையாட செய்வது போன்ற பல திட்டங்களை செயல் படுத்தியுள்ளதாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 2010ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலை கொண்டு சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி. விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான விருது பெற்ற ஆசிரி யர்களின் பட்டியலை என்.சி.இ.ஆர்.டி.வெளியிட்டுள்ளது. இதில் 2018ம் ஆண்டுக்கான விருது பட்டி யலில் நாடு முழுவதில் இருந்து 25 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இதில் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் தேர்வு பெற்றுள்ளனர். அதில் கற்றல் கற்பித்தலுக்காக 170க்கும் மேற்பட்ட காணொலிகள் மற்றும் அனிமேஷன்களை உருவாக்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி ஆசிரியர் தயானந்த் உள்பட 3 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
தேசிய விருதுக்கு தேர்வு பெற்ற உடுமலை அரசு ஆண்கள் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கே.பி. தயானந்தின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சுந்தராபுரம். கடந்த 2012-ம் ஆண்டு ஆசிரியர்தேர்வு வாரியம் மூலம் வெற்றி பெற்ற இவர் சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக தனது கல்விப் பணியை தொடங்கினார்.
2017-ம் ஆண்டு முதல் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றிய 3 ஆண்டுகளிலும் ஆங்கிலப்பாடத்தில் 6-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதற்கு காரணம் கற்பித்தலில் நவீன தொழில் நுட்பத்தை இவர் பயன்படுத்தியது தான் என்கின்றனர் சக ஆசிரி யர்கள். இதற்காகவே மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் அவருக்கு ஐ.சி.டி. விருது வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தயானந்த் கூறும் போது, நான் எம்.ஏ., பி.எட். ஆங்கில பட்டதாரி. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன். கற்பித்தலில் புராஜெக்டர்கள் பயன்படுத்தி பாடம் நடத்துவது, ஸ்கைப் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் அரசுப் பள்ளி மாணவர்களை உரையாட செய்வது போன்ற பல திட்டங்களை செயல் படுத்தியுள்ளேன்.
ஆசிரியர்களை குழுவாக இணைத்து பாடங்களை அனிமேஷன் வீடியோக்களாகவும் உருவாக்கியுள்ளேன். அரசு பாடப்புத்தகங்களில் ‘கியூஆர்’ கோடு அச்சிடப்பட்டிருக்கும். அதனை ஸ்கேன் செய்தால் நாங்கள் உருவாக்கியுள்ள வீடியோக்கள் வரும்.
இவ்வாறு 170 வீடியோக்கள் உருவாக்கியுள்ளோம். இந்த விருது எங்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி யாகவே கருதுகிறேன். இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்றார்.