இந்தியாவின் விமான சேவைகள் பாதிப்பு!

07.05.2025 08:01:52

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையை தொடர்ந்து, வட இந்தியா முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராய்ட்டர்ஸ் தகவலின்படி, ஸ்ரீநகர் விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டு, அங்கு எந்தவொரு வர்த்தக விமானமும் இன்று இயக்கப்படுவதில்லை என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

இண்டிகோ (Indigo) நிறுவனம் வெளியிட்ட பயண அறிவிப்பில், ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசர், லே, சந்திகர், தரமசாலா மற்றும் பிகானீர் உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா (Air India) நிறுவனம் புனே மற்றும் அமிர்தசரிலிருந்து இயக்கப்படவிருந்த விமானங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என Economic Times செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் (Spice Jet) நிறுவனம், தரமசாலா (DHM), லே (IXL), ஜம்மு (IXJ), ஸ்ரீநகர் (SXR), மற்றும் அமிர்தசர் (ATQ) ஆகிய விமான நிலையங்கள் மறு அறிவிப்புவரை மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பயணிகள் விமான நிலையங்களுக்கு செல்லும் முன் தங்கள் விமான நிலையை சரிபார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்துவின் தொடர்ச்சியாகும்.