அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க நடவடிக்கை !

25.02.2021 09:17:17

முக்கிய துறைகளை தவிர  மற்ற துறைகளின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவோம் என  பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மத்திய வரவு செலவு திட்டத்தில் இடம்பெற்றுள்ள தனியார் மயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து இணையவழியில் கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “ தொழில் முயற்சிகளுக்கும்  வணிகங்களுக்கும் ஆதரவு அளிப்பது மத்திய அரசின் கடமை. ஆனால்  அந்த தொழில்களை அரசே சொந்தமாக நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல. அதனால்தான் பொதுத்துறை நிறுவனங்களை விற்க வேண்டும் அல்லது நவீனப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது.

ஏனென்றால்  நிறைய பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அவற்றுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிட வேண்டி இருக்கிறது. அப்படி நலிந்த நிறுவனங்களுக்கு நிதி ஆதாரம் அளிப்பதால் பொருளாதாரத்தின் மீது சுமை கூடுகிறது.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 4 துறைகளை சேர்ந்த குறைந்தபட்ச பொதுத்துறை நிறுவனங்களை தவிர  மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்க அரசு உறுதி பூண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.