சர்வதேசத்துக்கு வாக்குறுதியளித்தால், அதனை நிறைவேற்ற வேண்டும்!

17.09.2026 16:00:28

அரசாங்கம் சர்வதேசத்துக்கு வாக்குறுதியளித்த பிரகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, புதிய சட்டத்தை கொண்டுவர தவறி இருக்கிறது. அதனாலே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதனால் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வாக்குறுதியளித்தால், அதனை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அதன் பாதிப்பு நாட்டுக்கு ஏற்படும் என பேராசிரியர் ஜீஎல். பீரிஸ் தெரிவித்தார்.

  

 

பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி புதன்கிழமை (16) கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இப்போது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வு நடைபெற்று வருகின்றது. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பான விரிவான அறிக்கையொன்றை அந்த அமர்வில் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் இலங்கைக்கு எதிராக மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதற்கு இலங்கை அரசாங்கத்தின் பதிலளிப்பு என்னவெனில், "அதிகமாக அழுத்தம் கொடுக்க வேண்டாம்" என்பதாகும். இப்போது இந்த நிலைமைக்கு யார் பொறுப்பேற்பது? தவறு எங்கே இருக்கின்றது?

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்ட மூலமொன்றை முன்வைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதியளித்திருந்தது. இந்தச் சட்டத்தை நியாயப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் மிகவும் தெளிவாக ஏற்றுக்கொண்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் மனித உரிமைகளைப் பாதுகாக்கவே முடியாது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 ஆம் ஆண்டு, அதாவது 47 ஆண்டுகளுக்கு முன்பாக சட்டமாக்கப்பட்டது. அச்சட்டம் நாலா பக்கங்களிலிருந்தும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எனவே, இதனை மேலும் நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதல்ல என்பதை ஏற்றுக்கொண்ட அரசாங்கம், இதனை மாற்றுவதாக வாக்குறுதியளித்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை சர்வதேசம் காத்திருக்கின்றது.

2025 டிசம்பர் மாதத்தில் நீதியமைச்சர் புதிய சட்டமூலமொன்றை முன்வைத்தார். அது 1979 ஆம் ஆண்டின் சட்டத்தை விடவும் ஆபத்தானது என அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது எனக் கூறப்பட்டது. அதனால் அரசாங்கம் அதனை வாபஸ் பெற்றுக்கொண்டது. அத்துடன், இதற்குப் பதிலாக வேறொரு சட்டமூலத்தைக் கொண்டு வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

அதன்பின்னர் கடந்த மாதம், அமைச்சரவை புதிய சட்டமூலமொன்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இன்று வரை இந்த நாட்டில் எந்தவொரு நபருக்கும் அந்தச் சட்டம் என்னவென்றோ, அதன் உள்ளடக்கம் என்னவென்றோ அல்லது அதன் சரத்துக்கள் என்னவென்றோ தெரியாது. அது தொடர்பில் எந்த தரப்பினருடனும் எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லை.

அரசாங்கம் 2025 டிசம்பரில் சமர்ப்பித்த சட்ட மூலமும் எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், யாருடனும் கலந்தாலோசிக்காமல், சமூகத்தில் நிலவிய கருத்துக்களைக் கருத்தில் கொள்ளாமல், இரகசியமாக அச்சட்டத்தை உருவாக்க முயன்றமையினாலேயே தோல்வியடைந்தது. இப்போதும் அதையே தான் செய்கிறார்கள். எனவே 2025 டிசம்பரில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்திற்கு ஏற்பட்ட அதே நிலைதான் இந்த புதிய சட்டமூலத்திற்கும் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக, சர்வதேச தரத்திற்கு இசைவான, நவீன சமூகத்திற்குப் பொருத்தமான பயங்கரவாத எதிர்ப்பு புதிய சட்டமூலத்தை அரசாங்கம் முன்வைக்கும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை காத்திருக்கின்றது. ஆனால் அது செய்யப்படவில்லை.

இதன் காரணமாகவே ஜெனீவா நகரில் இப்போது நடைபெற்று வரும் அமர்வில் இலங்கைக்கு எதிராக இத்தகைய கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டுகையில், இந்தச் சட்டம் ஜனநாயகத்திற்கு முரணானது என அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் நிலையிலும், 2025 ஆம் ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் 46 தடுத்து வைப்புகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, அரசாங்கமே விமர்சிக்கும் இச்சட்டத்தின் கீழ் 12 தடுத்து வைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? சட்டம் தவறானது, இதனை நீக்கிவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவருவோம் என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் செய்வதில்லை. மோசமானது எனக் கூறிய சட்டத்தையே தொடர்ந்து நடைமுறைப்படுத்துகின்றது. எனவே தான் இந்தச் சட்டத்தை நீக்குங்கள். புதிய சட்டத்தைக் கொண்டுவரும் வரை இதனை நடைமுறைப்படுத்த வேண்டாம். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுங்கள் என உயர்ஸ்தானிகர் மிகவும் தெளிவாகக் தெரிவித்துள்ளார் என்றார்.