சுரேஷ் சலேயை காப்பாற்ற முனைவது தவறான முன்னுதாரணம்!
|
புலிகளிடம் இருந்து நாட்டை காப்பற்றினார் என ஒரு பெரும் வீரனாக அவரை முன்னிறுத்தி, ஈஸ்டர் தாக்குதல் குற்றங்களில் இருந்து காப்பாற்ற முனைவது தவறான முன்னுதாரணம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
|
|
சுரேஷ் சலே விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களை சந்தித்து பேசியபோதே சுரேஷ் பிரேமசந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் சலே மீது சித்திரவதைகள் புரியப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் எவ்வகையான சித்திரவதைகள் என தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனவும் கணினி, தொலைபேசி என்பவற்றின் கடவுச்சொற்களை கொடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலையில் சிறு அறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததை தான் சித்திரவதை என கூறுவார்களாயின், அதனை விட பெரும் சித்திரவதைகளை எங்களுடைய தமிழ் இளைஞர்கள் அனுபவித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்கள் தமது உயிர்களை மாய்த்துள்ளனர். இவர்கள் தங்களின் எதிர்காலத்தை நினைத்து பயத்தில் உயிர் மாய்த்தார்களா? அல்லது தங்களின் பின்னால் இருந்தவர்களை காப்பாற்ற உயிர்மாய்த்தார்களா என தெரியவில்லை. அதேபோன்றே தற்போது சுரேஷ் சலே என்பவரின் உயிருக்கு ஆபத்து என கூறுகிறார்கள். சிலரை காப்பாற்ற உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க நினைக்கிறாரா? அல்லது தனது விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கிறாரா? ஈஸ்டர் தாக்குதலுக்கும் சுரேஷ் சலேவிற்கும் உள்ள தொடர் என்ன? அதன் பின்னணி என்ன? என்பதனை விசாரணை செய்யும்போது, புலிகளிடம் இருந்து நாட்டை காப்பற்றினார் என ஒரு பெரும் வீரனாக அவரை முன்னிறுத்தி ஈஸ்டர் தாக்குதல் குற்றங்களில் இருந்து காப்பாற்ற முனைவது தவறான முன்னுதாரணம். என்ன காரணத்திற்காக ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது? அதன் அரசியல் பின்னணி என்ன? அரசியல்வாதிகள் பின்புலமாக நின்று இயக்கினார்களா? என்பதை முற்றுமுழுதாக கண்டறியப்படவேண்டும். அரசாங்கத்தின் விசாரணைகள் காத்திரமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என தெரிவித்தார். |