பாஜக சமரசம் எடுபடவில்லையா?

13.12.2025 09:05:44

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது அரசியல் வாழ்க்கையின் அடுத்த கட்ட நடவடிக்கையை டிசம்பர் 24 ஆம் தேதி, எம்.ஜி.ஆர் நினைவு நாளில் அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், பிரிந்தவர்களை மீண்டும் இணைக்கும் அவரது முயற்சிகள் பலனளிக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக டிசம்பர் 15-ல் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பதாக இருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை டிசம்பர் 24-க்கு ஒத்திவைத்துள்ளார்.

சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ், தன்னை மீண்டும் அதிமுகவில் இணைக்க அழுத்தம் தர கோரியதாக பேசப்பட்டது. எனினும், அவர் புதிய கட்சி தொடங்க போவதில்லை என்று மறுத்திருந்தார்.

ஆனால், இந்த வார தொடக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ் உள்ளிட்ட துரோகிகளுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தியது. பாஜகவின் தனிப்பட்ட சமரச முயற்சிகள் கூட, ஈபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் எடுபடவில்லை என்று தெரிகிறது.

இதனால், அதிமுகவில் இணைவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த ஓபிஎஸ், டிசம்பர் 24-ல் தனது அடுத்த பெரிய நகர்வை அறிவிக்க உள்ளார். இந்த அறிவிப்பு புதிய கட்சியை தொடங்குவதா அல்லது வேறொரு கட்சியில் இணைவதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.