அரசியலமைப்பில் திருத்தம்: ’குழப்பும் சூழ்ச்சி’
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியமையானது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்களை குழப்பத்திற்கு கொண்டு செல்வதற்கும், அந்தத் தேர்தலை தாமதப்படுத்துவதற்கும் எடுத்துள்ள முயற்சியே ஆகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் கடந்த 8ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தொடர்பான அறிவிப்பின் போது உயர்நீதிமன்றம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதனை தெளிவாக கூறியிருந்தது. அத்துடன் 19ஆவது திருத்தத்திலும் அந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தத்தில், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடங்களாகக் குறைக்கும் வகையில் 30(2)வது சரத்து திருத்தப்பட்டது.
இந்நிலையில் அமைச்சரவையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பில் 83(பி) பிரிவை திருத்தம் செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே 19ஆம் திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. கடந்த 8ஆம் திகதி உயர்நீதிமன்றமும் அரசியலமைப்பில் உள்ள விடயயங்களையே குறிப்பிட்டுள்ளது.
அரசியலமைப்பின், 83 (பி) இல் கூறப்பட்டுள்ளபடி, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை குறிப்பிடும் 32ஆவது சரத்தை மாற்றவும், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகளுக்கு மேல் அதிகரிக்கவும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பு என்பது அவசியமாகும்.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தலை விடுக்க வேண்டியுள்ள காலகட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அமைச்சரவையில் யோசனை கொண்டுவருவது அவசியமற்ற விடயமாகும்.
மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே இதனை செய்கின்றனர். இதில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறி மக்களிடையே தேர்தல் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
தற்போதைய ஜனாதிபதிதான் அன்று 19ஆம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தவர். அந்த அரசியலமைப்பு திருத்தத்தில் பதவிக்காலம் 5 வருடங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இப்போது திருத்தங்கள் தொடர்பான யோசனைகளை கொண்டு வந்து மக்களை ஏமாற்ற திட்டமிடுகின்றனர். அத்துடன் தேர்தலை நடத்தாமல் இருக்க அல்ல, தேர்தலை தாமதப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால், ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் வீதிக்கு இறங்கும் நிலை ஏற்படலாம் என்றார்.