7ஆம் திகதி ஜெனீவா செல்கிறது இலங்கை குழு!

30.08.2026 13:42:09

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கையின் உயர் மட்ட இராஜதந்திரக் குழுவினர் சனிக்கிழமை ஜெனீவா நோக்கிப் பயணமாகவுள்ளனர்.

 

இக்கூட்டத்தொடரின் போது இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் பொது விவாதமும் இடம்பெறவுள்ளது. இந்த சர்வதேச அவதானிப்பிற்கு மத்தியில், நாட்டின் தற்போதைய நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் குறித்த விசேட அறிக்கைகளை ஜெனீவா தளத்தில் சமர்ப்பிக்க இலங்கைத் தூதுக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

சர்வதேசத்தின் கடுமையான அவதானிப்பிற்கு உள்ளாகியுள்ள யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட உணர்வுபூர்வமான பொறுப்புக்கூறல் விடயங்களை முறையாகக் கையாள்வது குறித்து வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.

ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாக சர்வதேச சமூகத்தின் கரிசனைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், நீண்டகாலமாகக் கோரப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்தல், ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான உத்தியோகபூர்வ திகதியை உறுதிப்படுத்தல் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் மூலம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது போன்ற உள்நாட்டு நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.

மேலும், பொறுப்புக்கூறலை உறுதி செய்ய புதிய நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில், குறிப்hக மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை, சட்ட அமுலாக்கம் சார்ந்த சர்வதேச விமர்சனங்களின் தொடர்ச்சியாகவே தற்போதைய நகர்வுகள் பார்க்கப்படுகின்றன.