ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

20.06.2026 15:25:05

ஜனாதிபதிச் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதிச் செயலகத்தில் உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.

 

அமைச்சுகளின் கீழ் உள்ள அரச திட்டங்களை மிகவும் திறம்பட முன்னெடுப்பது மற்றும் நிருவாகச் சீர்திருத்தங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்தக் கலந்துரையாடலுக்கு இணையாக, அரச நிருவாகக் கட்டமைப்பில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்வதற்காக ஒரு புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சுகளின் செயலாளர்களது உத்தியோகபூர்வ பணிகள் மற்றும் பொறுப்புக்களைக் துல்லியமாக மதிப்பீடு செய்வதற்காக விசேட ‘செயல்திறன் ஒப்பந்தங்கள்’ கையெழுத்திடப்பட்டன.

இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், செயலாளர்களின் செயல்திறன் மற்றும் அவர்களின் அமைச்சுகளின் முன்னேற்றம் குறித்து வருடத்திற்கு இருமுறை முறைப்படி மதிப்பீடு செய்ய இங்கு தீர்மானிக்கப்பட்டது.

ஒவ்வொரு அமைச்சுக்கும் மூலதன வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விதம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் இவ்வருடத்திற்குள் (2026) கட்டாயமாக நிறைவு செய்யப்பட வேண்டிய முக்கிய திட்டங்களை எவ்விதத் தாமதமுமின்றி விரைவுபடுத்துவது குறித்தும் செயலாளர்களுக்கு ஜனாதிபதிச் செயலாளரால் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

 

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நிருவாகச் சிக்கல்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் தங்களது புதிய திட்டங்களைத் தாமதமின்றி உடனடியாக ஆரம்பிப்பதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் மிக விரைவாக வழங்குவதற்குத் தேவையான காத்திரமான நிருவாக நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், அரச சேவைகளை நவீனமயப்படுத்தும் நோக்கில், அனைத்து அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் பணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.