அரசியல் பழிவாங்கலால் நாடு சீரழிகிறது!
|
அரசியல் பழிவாங்கல்களுக்கு முன்னுரிமை அளித்து, நாடு எதிர்கொண்டுள்ள முக்கியப் பிரச்சினைகளை தற்போதைய அரசாங்கம் புறந்தள்ளி வருவதாக முன்னாள் அமைச்சர் அலி சப்ரி குற்றம் சாட்டியுள்ளார். |
|
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் எதிரிகளைப் பின்தொடர்வதிலும் தண்டிப்பதிலும் அரசாங்கம் காட்டும் அதீத கவனம், நாட்டின் அவசர சவால்களை எதிர்கொள்வதில் இருந்து அதன் கவனத்தை முழுமையாக திசைதிருப்பியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அரசியல் எதிரிகளையும் முந்தைய ஆட்சியாளர்களையும் கைது செய்வதும், தண்டிப்பதுமே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக மாறும்போது, அதன் உண்மையான நிர்வாகம் பாதிக்கப்படுவதில் வியப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். டெங்கு பரவல், சிறை நெரிசல், விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு போன்றவையே நல்லாட்சிக்கான உண்மையான சோதனைகள் என்றும், கைதுகள் ஒருபோதும் பொதுக் கொள்கையாகாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கைவிலங்கு என்பது சுகாதாரக் கொள்கையோ, விளக்கமறியல் என்பது விவசாயக் கொள்கையோ அல்ல எனக் குறிப்பிட்ட சப்ரி, விசாரணைகள் அரசியல் உள்நோக்கமின்றி நடுநிலையாக நடக்க வேண்டும் என்றார். மேலும், அரசியல் அதிகாரம் தற்காலிகமானது என எச்சரித்த அவர், பழிவாங்கல் அரசாங்கத்தின் நோக்கமாக மாறும்போது, அங்கு நல்லாட்சியே முதல் பலியாகும் எனத் தெரிவித்துள்ளார். |