உண்மையை வெளிப்படுத்திய சீன தூதரகம்!

14.09.2022 10:00:48

கொழும்பில் அமைந்துள்ள, தெற்காசியாவிலேயே உயரமான தாமரைக் கோபுரத்தினை பார்வையிட செல்வதற்கான நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீன மொழி இணைக்கப்பட்டிருப்பதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என சிறிலங்காவிற்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள சீன தூதரகம், சமூக ஊடகங்களில் பரவும் நுழைவுச்சீட்டு போலியானது என்றும் அதை சமூக ஊடகங்களில் பகிரும் முன் சரிபார்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சமுக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், வைரலான நுழைவுச்சீட்டில் ஆங்கிலம், சிங்களம் மற்றும் சீன மொழிகள் காணப்படுகின்றன. அதேவேளை தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு காணப்படுகின்றது.

உத்தியோகபூர்வமான செயற்பாடு

நாளை 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. இவ்வாறான நிலையில், தாமரை கோபுரத்திற்குச் சென்று, நுழைவுச்சீட்டுக்களை வாங்கி உங்கள் கண்களால் நீங்களே அதனைப் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் சீன தூதரகம் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில், தாமரைக் கோபுரத்திற்கு பிரவேசிப்பதற்காக நுழைவுச்சீட்டு ஒன்றை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை அச்சிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நுழைவுச்சீட்டில் சீனப் பிரஜைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கட்டண அறவீட்டு விபரம்

அதேவேளை உள்ளூர் பிரஜைகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் 500 ரூபா கட்டணமும், வரையறையில்லா அடிப்படையில் 2000 ரூபா கட்டணமும் அறவீடு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு உள்நுழைவு கட்டணம் 20 டொலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான போலி தகவல் வெளியான நிலையில், தாமரை கோபுரம் குறித்த இலவச விளம்பரத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் சீன தூதரகம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளது.