மர்ம மரணங்கள் குறித்து உண்மை கண்டறிய வேண்டும்!
|
இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த மர்ம மரணங்களுக்கு சமூக ஊடகங்கள் தீர்ப்பு வழங்கும் இடமல்ல. பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகள் மூலமே உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
|
|
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்று வரும் மரணங்கள் பெரும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளன. கபில சந்திரசேனவின் மரணம், அதனைத் தொடர்ந்து ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம், மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் என இந்த அனைத்து மரணங்களுமே சந்தேகத்துக்கு உரியவையாகவே காணப்படுகின்றன. இந்த விவகாரங்கள் தொடர்பில் உண்மை என்ன என்பதைக் கண்டறிந்து நாட்டு மக்களுக்குக் கூற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. இவ்வாறான விபரீதங்கள் நிகழும்போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி உண்மைகளை மறைக்கவோ அல்லது திசைதிருப்பவோ அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. இதற்கான சரியான வழிமுறைகளை உருவாக்கி, பொலிஸாரின் முறையான விசாரணைகள் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளை முன்னெடுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக நீதிமன்றத்தின் மூலமே இதற்கான தீர்ப்பும் நீதியும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். சமூக ஊடகங்கள் தீர்ப்பு வழங்கும் இடமல்ல. அதேபோன்று, தற்போதைய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், ஒரு காலத்தில் ஜனாதிபதி வேட்பாளராகவும் இருந்த நந்தன குணதிலக்கவின் மரணமும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இது இயற்கையான மரணமா அல்லது கொலையா என்பது கூடத் தெரியாத அளவுக்குப் பேசப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரை மரணம் என்பது இயற்கையானது, நாமும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கபில, ரங்க விக்கிரமரத்ன, நந்தன என அடுத்தடுத்து நிகழும் இந்த மரணங்கள் தொடர்பில் நிலவும் மக்கள் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. இதனை மூடிமறைக்காமல், தமது சமூக ஊடகப் படைகளைப் பயன்படுத்தி உண்மைகளை மறைக்காமல், சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதை அரசாங்கம் நிரூபித்துக் காட்ட வேண்டும். இவ்விடயத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பிரித்துப் பேசத் தேவையில்லை. மக்களாட்சியில் மக்களாணையைப் பெற்று நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது. எனவே, அரசாங்கத்தின் கடமையை அவர்கள் சரியாகச் செய்ய வேண்டும். இந்த மரணங்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர் தரப்புடன் தொடர்புடைய விடயங்களின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து எங்களால் உடனடியாக எதுவும் கூற முடியாது. ஆனால், ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணத்தின் போது இரண்டு தசம் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனதாகப் பெரும் சர்ச்சை எழுந்தது. அது தற்கொலை என்று கூறப்பட்டாலும், அதுவே மரணத்தின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. நாட்டின் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் நடக்கும்போது, அதற்கு எதிராக முதன்மையாகச் செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் பொலிஸாராகும். ஆனால், இன்று பொலிஸ்மா அதிபர் குறித்தும் பல்வேறு கதைகள் பேசப்படுகின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் விசாரணைகளின் மூலமே உண்மை கண்டறியப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றார். |