வரலாற்றினை புரட்டிப் போட்ட கறுப்பு ஜுலை !

27.07.2021 01:02:19

 

இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு வழிவகுத்த மிகமுக்கிய காரணியாக 'கறுப்பு ஜுலை' இனக்கலவரங்களைக் குறிப்பிட முடியுமென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள 'உண்மையான தேசப்பற்றாளர்கள்' அமைப்பின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான கரிநாளாகக் கருதப்படும் 'கறுப்பு ஜுலை' இனக்கலவரங்கள் இடம்பெற்று 38 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையிலேயே நாம் 'உண்மையான தேசப்பற்றாளர்கள்' சார்பில் இந்த முதலாவது ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடாத்துகின்றோம்.

தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு வழிவகுத்த மிகமுக்கிய காரணியாக 'கறுப்பு ஜுலை' இனக்கலவரங்களைக் குறிப்பிடமுடியும்.

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலப்பகுதியில், ஜப்பானுக்கு அடுத்த நிலையில் காணப்பட்டது.

இலங்கையைப் போன்று சிங்கப்பூரை மாற்றியமைக்க வேண்டும் என்று லீ குவான் யூ கூறுமளவிற்கு அனைத்துத் துறைகளிலும் எமது நாடு சிறந்து விளங்கியது.

அவ்வாறு சிறந்து விளங்கிய, இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்பட்ட எமது நாடு இப்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகமோசமான வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி சர்வதேசத்தின் மத்தியில் தனித்துவிடப்பட்ட தோல்வியடைந்த அரசாகவும் இலங்கை மாறியிருக்கின்றது. கடந்த பலவருடகாலங்களாக மிகக்குறுகிய அரசியல் நோக்கங்களை மையமாகக்கொண்டு இடம்பெற்றுவந்த ஆட்சி நிர்வாகத்தின் காரணமாகவே எமது நாட்டிற்குப் படிப்படியாக இவ்வாறான நிலையேற்பட்டிருக்கின்றது.

இதுவரையான காலமும் நாட்டை ஆண்ட ஆளுங்கட்சிகள் மாத்திரமன்றி எதிர்க்கட்சிகளும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த பொதுமக்களும் நான் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் இந்த நிலைக்குப் பொறுப்புக்கூறவேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று அண்மைக்காலத்தில் ஜனாதிபதி தோல்வியடைந்துவிட்டார் என்பதைக் குறிக்கும் 'சேர் பெயில்' என்ற வாசகம் முக்கிய பேசுபொருளாகியிருக்கின்றது.

ஆனால் உண்மையில் அவரும் அவரது அரசாங்கமும் பிரதிநிதித்துவம் செய்கின்ற இன,மதவாத ஏகாதிபத்தியவாதக் கொள்கைகளே தோல்வியடைந்திருக்கின்றன.

அதேபோன்று அதற்கு நடைமுறைச்சாத்தியமற்ற மாற்றுயோசனைகளை முன்வைக்கின்ற எதிர்க்கட்சியும் தோல்வியடைந்திருக்கின்றது என்றார்.