வவுனியாவில் வீடுடைத்து பணம் மற்றும் நகை திருட்டு!

17.10.2021 02:49:59

வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் பகல் வேளையில் வீடு உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்த பணம் மற்றும் நகை என்பனவற்றை திருடி சென்றுவிட்டதாக நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்த நபர் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை 8 மணியளவில் செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்குச் சென்றுவிட்டார் . மாலை 6 மணியளவில் வீட்டிற்குத்திரும்பிய போது வீட்டின் முற்றத்தில் அலுமாரியின் பெட்டகத்தின் சிலபகுதிகள் சிதறிக் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டிற்குள் உட்சென்று பார்த்தபோது பின்கதவு உடைக்கப்பட்டு உட்புகுந்த திருடர்கள் அலுமாரியில் வைக்கப்பட்ட நான்கு பவுன் பெறுமதியான நகைகள் மற்றும் எழுபதினாயிரம் ரூபா பணம் என்பனவும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது .

இது குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .