இலங்கையின் மூலோபாய இருப்பிடம் அமெரிக்க முயற்சிகளின் மையமாக உள்ளது!
|
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர், செனட் வெளியுறவு உறவுகள் குழுவிடம் சாட்சியமளித்த போது, இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்குக்கு எதிர்வினையாற்றுவது என்பவற்றுக்கே வாஷிங்டன் முக்கியத்துவம் அளிக்கும் என்று தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் இந்த ஆண்டு ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியின் பாதிப்பிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், எரிக் மேயரின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. |
|
உலகளாவிய கப்பல் வழித்தடங்களில் இலங்கை அமைந்திருப்பதால், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கும், சீனாவின் வளர்ந்து வரும் பிரசன்னம் உட்பட பகைமைச் செல்வாக்குகளை எதிர்கொள்வதற்கும் இலங்கை மையமாக உள்ளது. அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும், உலகின் கடல்வழியாகக் கொண்டுசெல்லப்படும் கச்சா எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கும் இலங்கையின் கடல்வழியே செல்கின்றன. எனவே அதன் மூலோபாய இருப்பிடம், அமெரிக்க முயற்சிகளின் மையமாக அமைகிறது. தான் உறுதிப்படுத்தப்பட்டால், அமெரிக்கக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே தனது முதல் முன்னுரிமையாக இருக்கும். அதேவேளை, சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இடப்பெயர்வுகளுக்குப் பிந்தைய இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகள் முக்கியமானதாகும். உடனடி உதவிக்காக 2 மில்லியன் டொலரை அமெரிக்கா ஒதுக்கியுள்ளதுடன், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்க இராணுவத்தின் மூலோபாய வான்வழிப் போக்குவரத்துத் திறன்களையும் பயன்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கையுடனான அமெரிக்காவின் வலுவான மற்றும் நீடித்த பங்களிப்புக்கு ஆதாரம் உள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சியைக் குறித்துப் பேசிய எரிக் மேயர், கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டங்களைக் குறிப்பிட்டு, இலங்கை பிராந்தியப் பொருளாதாரத்தின் தலைமைத்துவமாக மாறத் தயாராக இருக்கும் ஒரு மீள்திறன் கொண்ட நாடு' என்றார். அடுத்த ஆண்டில், கொழும்புத் துறைமுகம் சரக்குக் கையாளும் திறனை இரட்டிப்பாக்க உள்ளது. இது இலங்கையின் துறைமுகங்கள், தளவாடங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளில் உள்ள குறிப்பிடத்தக்க மற்றும் மூலோபாய வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச நாணய நிதிய திட்டத்துடன் இணைக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர கொழும்பை வலியுறுத்துவோம். நாட்டின் பொருளாதாரச் சுதந்திரம் தேசிய சுதந்திரத்துடன் பிணைந்துள்ளது. எனவே புதிய சீர்திருத்தங்கள், அமெரிக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றார். சீனாவின் செல்வாக்கு பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், செனட் வெளியுறவு உறவுகள் குழுவின் தலைவர் ஜிம் ரிஷ், இலங்கையின் துறைமுக உள்கட்டமைப்பில் சீனாவின் பங்களிப்பு குறித்து உலகளாவிய அளவில் ஒரு எச்சரிக்கையாகும் என குறிப்பிட்டார். சீனர்கள், இலங்கைத் துறைமுகத்திற்குச் செய்ததெல்லாம், மக்கள் ஏன் சீனாவுடன் வணிகம் செய்யக் கூடாது என்பதற்கான உலகளாவிய உதாரணச் சின்னமாக மாறியுள்ளது என்றார். இதற்குப் பதிலளித்த எரிக் மேயர், அமெரிக்கா 'திறந்த மற்றும் வெளிப்படையான' இருதரப்பு உறவுகளை விரும்புவதாகவும், இலங்கை அதன் இறையாண்மையை உறுதிப்படுத்துவதை உறுதி செய்யவும், அதில் துறைமுகங்கள் மீதான இறையாண்மையும் அடங்கும் எனவும் தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கக் கூட்டுறவு, கடல்சார் ஆதிக்கம் குறித்த விழிப்புணர்வு, மற்றும் துறைமுகப் பாதுகாப்பைப் பேணுதல் ஆகியவை இந்தோ-பசிபிக் அணுகுமுறையின் ஒரு பகுதியாக இலங்கையுடனான அமெரிக்காவின் ஈடுபாட்டில் மையமாக இருக்கும் என்றும் மேயர் உறுதியளித்தார். |