சர்வதேச விசாரணைக்கு சட்டத்தில் இடமுண்டு.

10.07.2025 08:29:21

செம்மணி படுகொலை மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்றைய பாராளுமன்ற உரையில் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இலங்கை அரசியலமைப்பில் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை எனக் கூறியிருந்தார்.

இதற்கு சாணக்கியன் கடுமையாக பதிலளித்தார்.

“ நீதி அமைச்சர் அவர்களே, இலங்கையின் சட்டத்தின் கீழ், சர்வதேச விசாரணை நடைபெறுவதற்கான அமைப்பை உருவாக்க வழிகள் உள்ளன. காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் சட்டம் இதற்காகவே நிறைவேற்றப்பட்டது. அதைப் படித்துப் பாருங்கள்.

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ எதிர்க்கட்சியில் இருந்தபோது கொண்டுவந்த சட்டமூலம், உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, வெளிநாட்டு விசாரணையாளர்கள் அல்லது நீதிபதிகள் இதில் பங்கேற்பது அரசியலமைப்பிற்கு விரோதமல்ல என உயர் நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்தது. இதன்படி, சர்வதேச பங்கேற்புக்கு இலங்கையின் சட்ட கட்டமைப்பில் போதுமான இடம் உள்ளது” என்றார்.

மேலும், அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் சட்ட அறிவு குறித்து கேள்வி எழுப்பிய சாணக்கியன், “உங்கள் துறையில் இதுபோன்ற சட்டங்கள் பற்றிய உங்கள் அறிவு போதுமானதாக இல்லை. இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன், ஜனாதிபதி மன்றங்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும். தெளிவற்ற தகவல்களுடன் எனது தீர்மானத்தின் அடிப்படையை கேள்வி கேட்கிறீர்கள்” என்று விமர்சித்தார்.

சாணக்கியன் மேலும் கூறுகையில், “நான் சுயாதீன வழக்கறிஞர்களைப் பற்றி பேசவில்லை. மனித உரிமை மீறல்களுக்கான சிறப்பு வழக்கறிஞர் அலுவலகத்தைப் பற்றி பேசுகிறேன். சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அதிக வேலைப்பளு இருப்பதாக நீங்களே கூறியுள்ளீர்கள். என்று தெரிவித்தார்.