மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் அழகி

01.12.2021 07:39:18

பாகிஸ்தானின் கர்தார்பூர் சாகிப் குருத்வாராவில் மரபுகளை மீறி புகைப்படம் எடுத்து அவமதித்ததாக குற்றச்சாட்டிற்கு உள்ளான மாடல் அழகி சவுலேஹா, தன் நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சீக்கிய புனித தலமான கர்தார்பூர் சாகிப் குருத்வாரா உள்ளது. நம் நாட்டில் இருந்து ஆண்டு தோறும் ஏராளமான சீக்கியர்கள் இங்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் பாக்., மாடல் அழகி சவுலேஹா, உடைகளை விளம்பரம் செய்ய குருத்வாரா முன் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும், டில்லியின் சீக்கிய குருத்வாரா நிர்வாகக்குழு தலைவருமான மன்ஜிந்தர் சிங் சிர்சா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைஅடுத்து சவுலேஹா தன் தவறை உணர்ந்து புகைப்படங்களை நீக்கியதுடன், மன்னிப்பும் கேட்டுஉள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சீக்கிய சமூகம், அவர்களின் வரலாறு குறித்து அறியவே கர்தார்பூர் சென்றேன். என் பயண நினைவு களுக்காக, குருத்வாரா முன் புகைப்படம் எடுத்தேன்; அது விளம்பரத்திற்கானது அல்ல.யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. என் நடவடிக்கை யாரையேனும் புண்படுத்தி இருந்தாலோ அல்லது அவர்களின் கலாசாரத்தை நான் மதிக்கவில்லை என நினைத்தாலோ என்னை மன்னிக்கவும். இவ்வாறு அவர் கூறினார்.